குரூப் ‘பி’ (Group B) பிரிவில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், 9 வீரர்களுடன் சுருங்கிய கட்டார் (Qatar) அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, கனடா தனது முதலாவது உலகக் கோப்பை வெற்றியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
எனினும், இந்த ஆட்டம் கனடா வீரர் இஸ்மாயில் கோனேவின் (Ismael Kone) கொடூரமான காயம் மற்றும் மைதானத்தில் ஏற்பட்ட ஒழுக்கினக் கட்டுப்பாட்டுப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது.
வான்கூவரில் உள்ள பிசி பிளேஸ் (BC Place) மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஜொனாதன் டேவிட் (Jonathan David) ஹாட்ரிக் கோல் அடித்தார்.
கைல் லாரின் (Cyle Larin) மற்றும் நாதன் சலிபா (Nathan Saliba) தலா ஒரு கோல் அடித்ததுடன், கட்டார் அணியின் சொந்த கோல் (Own goal) ஒன்றும் சேர்ந்து கனடாவின் இந்த பிரம்மாண்ட வெற்றியை உறுதி செய்தது.
கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நேரில் வந்து கனடா அணியை உற்சாகப்படுத்தியதால் வான்கூவரில் கொண்டாட்ட சூழல் நிலவியது.
எனினும், ஆட்டத்தின் 51-ஆவது நிமிடத்தில் கோனேவுக்கு ஏற்பட்ட பலத்த காயம் அந்த மகிழ்ச்சியைக் குறைத்தது. கட்டார் வீரர் அசிம் மடிபோ பின்னால் இருந்து மோசமாகத் தாக்கியதில், இத்தாலியில் விளையாடும் மத்தியகள வீரரான கோனே தனது இடது காலைப் பிடித்தபடி வலியால் துடித்தார்.
காயத்தின் தீவிரம் உடனடியாகத் தெரிந்ததால், சக வீரர்கள் அவசர அவசரமாக மருத்துவக் குழுவை அழைத்தனர். இறுதியில் ஆக்சிஜன் குழாயை சுவாசித்தபடி, ரசிகர்களை நோக்கி கையசைத்தவாறே அவர் கவிகட்டில் (Stretcher) வெளியேற்றப்பட்டார்.
முதலில் இந்த தவறுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டிருந்தாலும், ‘வார்’ (VAR) பரிசீலனைக்குப் பிறகு அது சிவப்பு அட்டையாக மாற்றப்பட்டு மடிபோ வெளியேற்றப்பட்டார்.
முதற்பாதியிலேயே ஹோமம் அகமது (Homam Ahmed) சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதைத் தொடர்ந்து, கட்டார் அணி எதிர்கொண்ட இரண்டாவது வெளியேற்றம் இதுவாகும்.
9 வீரர்களுடன் விளையாடிய கட்டாரின் பலவீனத்தைப் பயன்படுத்திய கனடா, மேலும் மூன்று கோல்களைப் புகுத்தியது. காயம் அடைந்த கோனேவுக்குப் பதிலாகக் களம் புகுந்த சலிபா, 64-ஆவது நிமிடத்தில் ஒரு அபாரமான ஃப்ரீ கிக் மூலம் கோல் அடித்து அசத்தினார்.
அவர் அந்தப் பெருமிதத்தைக் கொண்டாட, காயம் அடைந்த கோனேவின் 8-ஆம் எண் ஜெர்சியை உயர்த்திப் பிடித்து தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.
தொடர்ந்து மாற்று வீரர் ஜேக்கப் ஷாஃபெல்பெர்க் அடித்த பந்து, கட்டார் தடுப்பாட்ட வீரர் முகமது மனாயின் உடலில் பட்டு ‘சொந்த கோல்’ ஆக மாறியது. ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (Injury time) ஜொனாதன் டேவிட் தனது மூன்றாவது கோலை அடித்து ஹாட்ரிக் சாதனையை நிறைவு செய்தார்.
முக்கிய சாதனைகள்:
உலகக் கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட 56-ஆவது ஹாட்ரிக் இதுவாகும் (2026 தொடரின் 2-ஆவது ஹாட்ரிக்). இதற்கு முன் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி, அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஹாட்ரிக்கை பதிவு செய்திருந்தார்.
1930 ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கோப்பையில் ஹாட்ரிக் அடித்த முதல் ‘கான்காகேஃப்’ (CONCACAF) பகுதி வீரர் மற்றும் உலகக் கோப்பையில் ஒரே போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோல்களை அடித்த முதல் கனடா வீரர் என்ற பெருமையை டேவிட் பெற்றார்.
ஆட்டம் முடிந்த பிறகும் இரு அணி வீரர்களுக்கும் இடையே மைதானத்தின் நடுவே மோதல் வெடித்தது. பின்னர் ஃபிஃபா (FIFA) தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகள் இரு தரப்பையும் தடுத்து நிறுத்தினர்.
இனி வரும் போட்டியில், கனடா அணி சுவிட்சர்லாந்துக்கு எதிராக டிரா (Draw) செய்தாலே குழுவில் முதலிடத்தைப் பிடிக்க முடியும். அதேநேரம் கட்டார் மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினா அணிகள் புதன்கிழமை மோதவுள்ளன.










