நீண்டகாலமாக உலகம் பூராகவும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள Ceylon Tea தரத் சின்னத்திற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
சீனி, குளுக்கோஸ் வகைகள் மற்றும் சோடியம் பைகாபனேட், பெரசல்பேட் போன்ற பொருட்களைக் கலந்து தேயிலை உற்பத்தி செய்தல் தொடர்பாக அண்மைக் காலங்களில் ஊடகங்களின் மூலம் அறியக் கிடைக்கின்றது. அவ்வாறான தேயிலை உலக சந்தையில் நிராகரிக்கப்படுவதன் மூலம் தேயிலைக் கைத்தொழில் பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
நாட்டின் புகழுக்கும் உலக சந்தையில் Ceylon Tea க்கும் உள்ள கேள்விக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு எதிர்காலங்களில் எவ்வகையிலும் இடமளிக்க முடியாதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சந்தையில் மிளகுக்கு ஏற்பட்ட பாதிப்பு தேயிலை கைத்தொழிலுக்கும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி உறுதியாக குறிப்பிட்டார்.
உயர் தரத்திலான தேயிலை உற்பத்தி தொடர்பாக சிறு மற்றும் மத்திய தர தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்களுடனும் ஏற்றுமதியாளர்களுடனும் இன்று (18) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
உலக சந்தையில் தேயிலைக்கான கேள்வி 65 வீதத்திலிருந்து 45 வீதமாக குறைவடைவதற்கு தரம் குறைவான தேயிலை உற்பத்தி காரணமாக அமைந்துள்ளது. இந்நாட்டில் 705 தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. 45 தொழிற்சாலைகளின் முறையற்ற செயற்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதோடு, விசாரணைகளின் பின்னர் 18 தொழிற்சாலைகளின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டதாக தேயிலை சபையின் தலைவர் ஜயம்பதி மொல்லிகொட தெரிவித்தார்.
கழிவுத் தேயிலை மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய இரசாயனப் பொருட்களை பயன்படுத்தி தேயிலை உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனங்களை சுற்றி வளைப்பதற்கு புலனாய்வு துறையினரின் தகவல்களின் அடிப்படையில் பொலிஸ் விசேட படையணி மற்றும் பொலிஸாரினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாட்டுக்கு கிடைக்கும் வருமானத்திற்கோ தேயிலை கைத்தொழிலுக்கோ தரம் குறைவான தேயிலை உற்பத்தி தடையாக அமைவதற்கு இடமளிக்கக்கூடாது. உயர் தரத்திலான தேயிலையை உலக சந்தைக்கு வழங்குவதற்கு தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த தரத்திலான தேயிலை உற்பத்திக்கு இடமளிக்கப்பட மாட்டாது. அதனையும் தாண்டி அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் தொழிற்சாலைகளை மூடுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
புலனாய்வுத் துறையினரின் உதவியுடன் தொடர்ச்சியான விசாரணைகளை நடத்தி இவ்வாறான நிறுவனங்களை சுற்றி வளைக்குமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், பதில் பொலிஸ்மா அதிபர், புலனாய்வுத்துறை பிரதானிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தேயிலை கைத்தொழிற்சாலை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.










