இலங்கை தேயிலை தொழிற்துறையைப் பாதுகாத்து, அது சார்ந்த சமூகத்தை பலப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, இம்முறை சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று ‘Ceylon Tea Walk” என்ற விசேட நடை பேரணி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘இலங்கை தேயிலை தொழிற்துறையை பாதுகாப்போம் சமூகத்தை பலப்படுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் இப்பேரணி நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
” சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு ‘இலங்கை தேயிலை தொழிற்துறையை பாதுகாப்போம் சமூகத்தை பலப்படுத்துவோம்’ என்ற தொனிப்பொருளில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இலங்கை தேயிலை சபையிலிருந்து இன்று காலை 9.30 மணிக்கு நடை பேரணியொன்றை ஆரம்பித்து காலி முகத்திடல் வரை செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ‘Ceylon Tea Walk’ என்ற கருப்பொருளின் கீழ் இந்த நடை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
தேயிலை பயிர் செய்கையாளர்கள், தொழிலாளர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலை சேகரிப்பாளர்கள், தேயிலை சார் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அனைவரும் இதில் பங்கேற்கவுள்ளனர். இலங்கை மாத்திரமின்றி தேயிலையை பிரதான உற்பத்தியாகக் கொண்டுள்ள பல நாடுகளும் இதில் பங்களித்துள்ளன.
இலங்கையின் தேயிலையை பெற்றுக் கொள்ளும் நாடுகளுடன் இணைந்து அந்நாடுகளில் சிலோன் டீ என்ற நாமத்தை மேலும் பிரசாரப்படுத்தி வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது நாட்டில் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் காணப்படுகின்றனர். மத்திய தேயிலை உற்பத்தியாளர்கள் உள்ளடங்கலாக சுமார் 5 இலட்சம் தேயிலை தொழிற்துறை சார்ந்தவர்கள் காணப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் கருத்திக் கொண்டு தேயிலைத் துறையை பாதுகாப்பதை இலக்காகக் கொண்டே ‘இலங்கை தேயிலை தொழிற்துறையை பாதுகாப்போம். சமூகத்தை பலப்படுத்துவோம்’ என்ற தொனிப்பொருளிலில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இலங்கை தேயிலை சபை, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்டு இத்துறையை அரசாங்கம் பராமரித்து வருகிறது என்றார்.
