புதிய முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்துக்கு சென்று, முதல் நாளில் சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் புதிய முதல்வராக ஜோசப் விஜய் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு விழா முடிந்த பின்னர், தலைமைச் செயலகத்துக்கு சென்றார். அங்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகள் புடைசூழ, முதல்வர் அறைக்குச் சென்றார். முதல்வர் நாற்காலியை சற்று வாஞ்சையுடன் உற்றுநோக்கிவிட்டு பின்னர் அதில் அமர்ந்தார்.
தொடர்ந்து, தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரை நியமிப்பதற்கான ஆவணம் உட்பட சில கோப்புகளில் கையெழுத்திட்டு தனது அலுவல் பணிகளை தொடங்கினார். இதையடுத்து அனைத்து துறைகளின் செயலர்கள், இயக்குநர்கள், அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். அப்போது செங்கோட்டையன், ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் தவெக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையடுத்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வுக் கூட்டம், முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநிலத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நிதிநிலை குறித்தும்.. இந்த விவகாரத்தில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பதால், கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் எம்.சாய்குமார், உள்துறை செயலர் க.மணிவாசன், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
