தைவானுக்கு பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு சீனா பயணத் தடை விதித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நியூசிலாந்தின் தேசியக் கட்சியின் Maureen Pug , தொழிற்கட்சியின் Duncan Webb , ‘நியூசிலாந்து பர்ஸ்ட்’ கட்சியின் David Wilson மற்றும் ‘ ACT கட்சியின் லாரா Laura McClure ஆகிய நால்வருமே கடந்த மே மாதம் தைவானுக்கு விஜயம் செய்திருந்தனர்.
தைவானுக்கு வழக்கமான பயணங்களை மேற்கொள்ளும் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான கூட்டுக்குழுவின் ஒரு பகுதியாகவே இவர்கள் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
தைவான் சென்ற நான்கு எம்பிக்களும் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய நாடுகளுக்குள் நுழைவதற்கு ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சீன இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளதாக நியூசிலாந்து நாடாளுமன்றச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குறித்த எம்பிக்கள் மன்னிப்பு கோரினால் இந்த பயணத்தடை குறைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என சீனத் தரப்பு கூறியதாகத் தெரிகிறது.
சீனாவின் இந்த பயணத்தடை விதிப்பு குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகளும் சீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், சீனாவின் இந்த நடவடிக்கை ஆஸ்திரேலியாவிற்கு “கவலையளிக்கிறது” என்றும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.
