இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா மேலும் கூடுதலான பங்களிப்பை வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் 105 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே தூதுவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, பல தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய தூதுவர் கீ ஜென்ஹொங், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வெற்றிகரமான கலந்துரையாடல்களை அடுத்து, சீனா-இலங்கை உறவுகளுக்கான புதிய திட்டவரைபு உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இரு நாடுகளின் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, சீனா-இலங்கை உறவுகளின் முக்கிய தூணாகும் என்று குறிப்பிட்ட அவர், இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் உறவுகளை வளர்த்துக் கொள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
“இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், இலங்கையில் டிஜிட்டல் நகரங்களின் (digital cities) வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் சீனா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தவும், இலங்கையின் வளர்ச்சிக்கு மேலும் கூடுதலான பங்களிப்பை வழங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றும் தூதுவர் மேலும் கூறினார்.










