கொங்கோவை மரணபூமியாக்கும் எபோலா: 438 பேர் உயிரிழப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா தொற்றினால் நிகழ்ந்த உயிரிழப்புகள் 400 ஐ கடந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 40 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 15 அன்று இந்தத் தொற்றுப் பரவல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 1,406 ஆக உயர்ந்துள்ளது. இதில் 438 மரணங்கள் அடங்கும் என்பதுடன், இதன் இறப்பு விகிதம் 31.2% ஆக உள்ளது.

இந்தத் தொற்றுப் பரவல் முக்கியமாக இத்தூரி (Ituri), வடக்கு கிவு (North Kivu), தெற்கு கிவு (South Kivu) மாகாணங்களில் உள்ள 34 சுகாதார மண்டலங்களில் தீவிரமடைந்துள்ளது.

குறைந்தது 192 பேர் இந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனர், அதே நேரத்தில் 609 நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றுப் பரவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த பல மரணங்கள் குறித்து இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருவதால், கொங்கோவில் அறிக்கை செய்யப்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கை உண்மையான அளவை விடக் குறைவாக இருக்கவே வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

பாதுகாப்பற்ற சூழ்நிலை, மக்கள் இடப்பெயர்வு, சமூகத்தினரின் எதிர்ப்பு, சுகாதார மையங்கள் மீதான அழுத்தம் போன்ற காரணிகளே ‘எபோலா புந்திபூகியோ’ (Ebola Bundibugyo) வைரஸ் ரகத்திற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளைக் பலவீனப்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெகெடி (Felix Tshisekedi) இந்த வார தொடக்கத்தில் 319 மில்லியன் டொலர் மதிப்பிலான எபோலா தடுப்புத் திட்டத்தை அறிவித்தார்.

இதற்கிடையில், கொங்கோ மற்றும் 20 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள உகாண்டா ஆகிய நாடுகளின் எபோலா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க, நன்கொடையாளர்களும் கூட்டாளிகளும் இணைந்து 910 மில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர் என்று ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Africa CDC) தெரிவித்துள்ளன.

Related Articles

Latest Articles