நாட்டுக்கோழியை சமைத்த விவகாரத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, இரத்தக்களரியில் முடிந்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் லிந்துலை பகுதியில் இடம்பெற்றுள்ளது என தெரியவருகின்றது.
லிந்துலை, மவுசல்ல மேல் பிரிவு பகுதியில் நேற்று (18) இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாட்டுக்கோழி ஒன்றை, தந்தை வெட்டி சமைத்துள்ளார். இது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாத மகன், கூரிய ஆயுதத்தை எடுத்து தந்தையை தாக்கியுள்ளார்.
மகன் நடத்திய தாக்குதலில் காயமடைந்த தந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
தந்தையைக் கொடூரமாகத் தாக்கிய பின்னர், குறித்த மகன் அப்பகுதியிலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
கௌசல்யா










