மலையகத்தைச் சேர்ந்த இரண்டு குத்துச்சண்டைப் பயிற்றுவிப்பாளர்கள் தொழில்முறை குத்துச்சண்டை (Pro Boxing) பயிற்சித் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.
கொட்டக்கலையைச் சேர்ந்த செ. செபஸ்டியன் மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்த வீ. அருளழகன் ஆகிய இருவரும் கடந்த நவம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கொழும்பு கோல்ஃப் பேஸ் பகுதியில் உள்ள Art Gallery இல் நடைபெற்ற தொழில்முறை குத்துச்சண்டைப் பயிற்சிப் பாடநெறியில் கலந்துகொண்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இப்பயிற்சியில் பங்கேற்ற இவர்கள், இதுவரை அமெச்சூர் (Amateur) குத்துச்சண்டைப் போட்டிகளுக்காக வீரர்களைப் பயிற்றுவித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தொழில்முறை குத்துச்சண்டைப் பயிற்சியிலும் தகுதி பெற்றுள்ள இவர்கள், எதிர்காலத்தில் மலையகத்திலிருந்து தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை உருவாக்குவதற்கும், அவர்களுக்குப் பயிற்சியளித்து போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்கும் எதிர்பார்த்துள்ளனர்.
இவர்களின் இந்த முயற்சியின் ஊடாக மலையகக் குத்துச்சண்டை வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சாதனைகள் படைத்து, மலையகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

