“நாடு தற்போது பயங்கரமான பொருளாதார ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த உண்மையை மக்களுக்குத் தெரிவிக்காமல், தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசு மக்களை ஏமாற்றி வருகின்றது” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என நாடகமாடும் அரசு, எப்போதுமே உண்மையை மறைத்துப் பொய்களைப் பரப்பிக்கொண்டே பால் மா மற்றும் எரிபொருள்களின் விலைகளைத் தொடர்ந்து கூட்டி வருகின்றது.
எரிபொருள் மற்றும் பால் மா விலைகளைத் திடீரெனக் கூட்டுவதற்கு நாட்டில் தற்போது மறைந்திருக்கும் கொடூரமான பொருளாதார ஆபத்தே முக்கிய காரணமாகும். உலக நிலையான பொருளாதாரக் கோட்பாட்டின்படி, ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது குறைந்தது 3 மாத கால இறக்குமதி மதிப்புக்குச் சமமாக இருக்க வேண்டும்.
ஜனாதிபதி கூறுவது போல் நாட்டில் 7 பில்லியன் டொலர் கையிருப்பு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், தற்போதைய சூழலில் மாதத்துக்கு 2 பில்லியன் டொலர் வீதம் 3 மாதங்களுக்கு 6 பில்லியன் டொலர் அத்தியாவசியத் தேவைக்கே செலவாகிவிடும். தற்போது ரூபாவின் மதிப்பிழப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் இந்த எஞ்சிய கையிருப்பும் மிக வேகமாக உருகி வருகின்றது.
அரசு கூறும் 7 பில்லியனில், 1.2 பில்லியன் டொலர் சீன யுவான் வடிவில் காணப்படுகின்றது. அதனை எம்மால் தற்போதைய தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது. எனவே, எம்மால் பயன்படுத்தக்கூடிய உண்மையான கையிருப்பு 5.8 பில்லியன் டொலர்கள் மாத்திரமே.
2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது 95 ரக பெற்றோலின் விலை 470 ரூபாவாகக் காணப்பட்டது. இன்று அதன் விலை 410 ரூபாவாக உள்ளது. உலகச் சந்தை நிலவரப்படி இந்த மதிப்பு இன்னும் அதிகரித்தால், நாடு மிக விரைவில் மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்வது உறுதி.
அண்மைக் காலமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அந்நியச் செலாவணி பரிமாற்றங்கள் அதிகரித்து காணப்பட்டாலும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் அங்குள்ள இலங்கையர்களுக்குத் தொழில் இழப்புகள் ஏற்பட்டு, அந்த வருவாயும் சட்டெனக் குறையும் அபாயம் எழுந்துள்ளது.
எதிர்வரும் 2028ஆம் ஆண்டு நாடு மிக மோசமான நிலையை அடையும். 2027 மார்ச் மாதத்துடன் தற்போதைய ஐ.எம்.எவ். இணக்கப்பாடு முடிவுக்கு வரும் வேளையில், நாட்டுக்குக் கிடைக்கும் நிலைப்படுத்தும் ஆற்றல் நீங்கிவிடும்.
2028ஆம் ஆண்டு முதல் நமது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் தொகை 1.5 பில்லியனிலிருந்து 3.5 பில்லியன் டொலர் வரை பாரியளவில் அதிகரிக்கும்.
நாட்டின் கையிருப்பு 13.4 பில்லியன் அல்லது 14 பில்லியன் டொலராக இருக்க வேண்டும் என ஐ.எம்.எவ். கூறியுள்ளது. ஆனால், தற்போது அதில் 50 வீதம் மாத்திரமே நம் வசம் உள்ளது. இந்த இலக்கை அடைய மாதந்தோறும் 600 மில்லியன் டொலர்களை நாம் ஈட்ட வேண்டும். ஆனால், தற்போதைய அரசு மாதத்துக்கு வெறும் 60 மில்லியன் டொலர்களை மாத்திரமே தேடி வருகின்றது.
எனவே, நிலைமை கையை மீறிச் செல்வதற்கு முன்பாகவே, தற்போதிருந்தே அடுத்த கட்ட ஐ.எம்.எவ். இணக்கப்பாட்டை நோக்கி நகர்ந்து, மக்களுக்கு அழுத்தம் குறைந்த மாற்று உடன்படிக்கையை நோக்கிச் செல்ல அரசு முற்பட வேண்டும்.
தற்போதைய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை அடியோடு மறந்துவிட்டது.
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அடக்க விலையிலேயே மக்களுக்கு எரிபொருட்களைப் பெற்றுத் தருவோம் என்றார்கள். ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை.
மின்சாரக் கட்டணத்தை உடனடியாக 33 வீதத்தால் குறைப்போம் என்று மேடைகளில் முழங்கினார்கள். அதுவும் செய்யப்படவில்லை.
விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த அரசு இன்று நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நடுத்தெருவில் கைவிட்டுவிட்டது.” – என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.










