வேகமாக வளர்ந்து வரும் இந்திய பானச் சந்தையில் ‘எனர்ஜி டிரிங்க்’ என்ற பெயரில் விற்கப்படும் அதிகளவு கஃபின் (caffeine) கொண்ட பானங்களை, இனி அந்த விளக்கத்துடன் விற்கக் கூடாது என இந்திய அரசு தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டளவில் 1.6 பில்லியன் டொலர் மதிப்பை பெறும் என எதிர்பார்க்கப்படும் இந்தச் சந்தையில், ஒழுங்குமுறை நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் நிறுவனங்களின் முயற்சிகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைக்குழு (FSSAI) ஜூலை தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிவிப்பில், இதுபோன்ற தயாரிப்புகளுக்கு இந்தியாவில் எந்தவித நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளும் இல்லை என்றும், பானங்கள் “உடலையும் மனதையும் புத்துணர்ச்சியடையச் செய்யும்” அல்லது “பொதுவான பலவீனத்தைப் போக்க உதவும்” போன்ற விளம்பரக் கூற்றுகள் நுகர்வோரை தவறாக வழிநடத்துபவை என்றும் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், இது குறித்து மேலதிக விபரங்கள் எதையும் அது வெளியிடவில்லை.
ஆனால், FSSAI வழங்கிய தனியார் தகவலில் அதன் நிலைப்பாடு மேலும் கடுமையானதாக இருந்தது: பெப்சி (Pepsi), ரெட் புல் (Red Bull), மான்ஸ்டர் (Monster), கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் (Reliance) மற்றும் ஹெல் எனர்ஜி (Hell Energy) ஆகிய நிறுவனங்கள் “எனர்ஜி டிரிங்க்” அல்லது அதுபோன்ற சொற்களைப் பயன்படுத்துவதைக் கட்டாயம் நிறுத்த வேண்டும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையானது குறித்த நிறுவனங்களுடன் ஒரு முரண்பாட்டை உருவாக்கியுள்ளது. “எனர்ஜி” என்ற வகைப்படுத்தப்பட்ட முத்திரையை நீக்குவது, உடனடி ஆற்றல் அளிப்பதாகக் கூறி கட்டியெழுப்பப்பட்ட பிராண்டுகளையும் விற்பனையையும் பாதிக்கும் என அந்நிறுவனங்கள் அஞ்சுகின்றன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூத்த தொழில்துறை அதிகாரிகளுடனான சந்திப்பில், FSSAI தலைமை நிர்வாகி ரஜித் புன்ஹானி, வணிகப் பாதிப்புகள் குறித்த வாதங்களை நிராகரித்தார். நிறுவனங்கள் இந்த முடிவை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த சுதந்திரம் உண்டு என்றும் அவர் கூறியதாக பேச்சுவார்த்தை பற்றிய தகவல் அறிந்த இருவர் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு, லேபிள் (Label) மாற்றத்திற்கு இணங்க தொழில்துறை ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்க வட்டாரம் தெரிவித்தது. மேலும் இதற்கு இணங்குவதற்கு FSSAI அவர்களுக்கு 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
எனர்ஜி டிரிங்க்ஸ் அதிக அளவு காஃபின், சர்க்கரை மற்றும் ‘டாரின்’ (taurine – ஓர் அமினோ அமிலம்) ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், உலகளவில் பல ஒழுங்குமுறை அதிகாரிகளிடையே சுகாதாரம் பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக காஃபின் கொண்ட எனர்ஜி டிரிங்க்ஸுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. மேலும் பாகிஸ்தானில் உள்ள சில பகுதிகள் இவற்றை “தூண்டுதல் பானங்கள்” (stimulant drinks) என்று அழைக்க வேண்டும் கட்டாயப்படுத்தியுள்ளன.
எனர்ஜி டிரிங்க்ஸ் வணிகமானது உடனடி ஆற்றல் அளிக்கும் சந்தைப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
ரெட் புல்லின் “Gives You Wiiings” என்ற முழக்கம் உலகளவில் புகழ்பெற்றது. அதே வேளையில் பெப்சி நிறுவனம் தனது ‘ஸ்டிங்’ (Sting) பானத்தை இந்தியாவில் விளம்பரம் செய்யும்போது, அது உடலுக்குள் மின்னலை அனுப்பி, “மின்சார ஆற்றலை” (electrifying energy) வழங்குவது போல் காட்டுகிறது.
முக்கிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய பானங்கள் சங்கம் (Indian Beverage Association), விதிமுறைகளுக்கு இணங்குவதற்கும், அறிவியல் அடிப்படையிலான கொள்கை குறித்து ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கும் தாங்கள் கடமைப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
