மெட்ரோ (Metro) பஸ்களைச் சேதப்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதற்காக அவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்குப் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் கூறுகையில்,
“சாரதிகளாக இருந்தாலும் சரி, உரிமையாளர்களாக இருந்தாலும் சரி, இலங்கை மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
தற்போது சுமார் 100 மெட்ரோ பேருந்துகள் இயங்கி வருவதாகவும், பெரும்பாலான தனியார் பேருந்துகள் இந்தச் சேவைக்கு எந்தவித இடையூறும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“சுமார் 100 மெட்ரோ பேருந்துகள் சேவையில் உள்ளன. பெரும்பாலான தனியார் பேருந்துகள் இதனால் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு சிலரே இத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இதைத் தனியார் பேருந்து உரிமையாளர்களால் ஏற்படும் பொதுவான பிரச்சினையாக நான் வகைப்படுத்த மாட்டேன்” என்று அவர் கூறினார்.
மேலும், பொதுமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த புதிய போக்குவரத்துத் திட்டத்திற்கு ஏற்றவாறு அனைவரும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், பேருந்துகளைச் சேதப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் இச்சம்பவங்களுக்குக் காரணமானவர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், இன்னும் ஒரு வருடத்திற்குள் மெட்ரோ பேருந்து சேவையில் தனியார் துறையினரின் பங்களிப்பும் அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.










