ஈ.டி.சி.எஸ். என்ற (E.D.C.S) கல்விச் சேவையாளர் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கத்தின் பதுளை மாவட்டக் கிளையினால், அனைத்து கடன் வழங்கும் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டிருப்பதினால், பதுளை மாவட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கம் கடந்த காலங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. அதையடுத்து இடம்பெற்ற அச்சங்கத்தின் நிருவாக சபைத் தெரிவில் சங்கத்தின் கட்டுப்பாடு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சிக்கு மாற்றப்பட்டது.
இக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கத்தில், இந்நாட்டின் ஆசிரிய, ஆசிரியைகள் பெரும்பாலானோர் அங்கத்துவம் பெற்றிருக்கும், மிகப் பெரியதொரு சங்கமாகும். கடந்த காலங்களில் இச் சங்கத்தினால், ஆசிரிய, ஆசிரியைகள் பெரும் நன்மைகளைப் பெற்றிருந்தனர்.
தற்போதைய நிலையில் பதுளை மாவட்ட ஈ.டி.சி.எஸ். என்ற கல்விச் சேவையாளர் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கம், அனைத்து கடன் வழங்கும் வேலைத்திட்டங்களை நிறுத்தியுள்ளதால் பயனாளிகளான ஆசிரிய, ஆசிரியைகள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். இதுகுறித்து, ஆசிரிய, ஆசிரியைகள் பலர் தத்தமது விசனங்களை தெரிவித்துள்ளனர்.
எம். செல்வராஜா, பதுளை