முட்டை விலை அதிகரிப்பு

இன்று திங்கட்கிழமை (20) முதல் முட்டை விலைகள் விலை அதிகரிக்கப்படும், அதன்படி வெள்ளை முட்டை ஒன்றின் சில்லறை விலை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 42 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படும் என்றும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை குளியாப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, இந்த விலை உயர்வுக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே பொறுப்பு என குற்றம்சாட்டினார்.

சோள இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதால் கோழித் தீவனத்திற்குப் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உள்ளூர் சோள உற்பத்தி முட்டைத் தொழிற்துறையின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

இதன் காரணமாக, உற்பத்தியாளர்கள் அரிசி உள்ளிட்ட மாற்றுத் தீவனப் பொருட்களைப் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும், இது கோழிகளின் ஆரோக்கியத்தையும் செரிமானத்தையும் மோசமாகப் பாதித்துள்ளதாகவும் ரத்நாயக்க தெரிவித்தார். இதன் விளைவாக முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சில ஒழுக்கமற்ற வியாபாரிகள் விலங்குத் தீவனத்தில் இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதால் பெருமளவிலான கோழிகள் இறந்து, பண்ணையாளர்களுக்குப் பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Related Articles

Latest Articles