அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்ற எல்ல ஹோட்டலுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீர் விற்றதற்காக, கரந்தகொல்ல, நபோரா எல்ல பகுதியில் அமைந்துள்ள ‘பியூச்சர் லைப் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட்’ நிறுவனத்திற்கு பண்டாரவளை நீதிவான் நீதிமன்றம் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் விதிகளை மீறியதற்காக, பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் அந்த விடுதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தனர்.

ஜூலை 10 அன்று அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, அந்த விடுதி கட்டுப்படுத்தப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு ஜூலை 22 அன்று பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, விடுதி நிறுவனம் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டது. அதைத் தொடர்ந்து நீதிமன்றம் ரூ. 10 லட்சம் அபராதம் விதித்தது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் குறித்து அலுவலக நேரங்களில் 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Latest Articles