இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கும் (SLBFE) ரஷ்யாவின் தேசிய கட்டுமான சங்கத்திற்கும் (NOSTROY) இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் இலங்கையைச் சேர்ந்த திறனுள்ள மற்றும் பகுதித் திறனுள்ள (semi-skilled) தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவுள்ளன.
ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள கட்டுமானத் திட்டங்களுக்கு இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக ரஷ்யாவின் சிறப்புப் பிரதிநிதிகள் குழுவொன்று SLBFE பணிமனைக்கு விஜயம் செய்தது. இச்சந்திப்பின்போது, திறனுள்ள தொழிலாளர்களைப் பெறுவதற்கு உகந்த நாடாக இலங்கையை அங்கீகரித்ததற்காக NOSTROY அமைப்பிற்கு SLBFE தலைவர் கோசல விக்கிரமசிங்க தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கையில் திறனுள்ள மற்றும் பகுதித் திறனுள்ள தொழிலாளர்களின் வலுவான இருப்பு உள்ளதை சுட்டிக்காட்டிய விக்கிரமசிங்க, சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய நிபுணர்களை உருவாக்குவதில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) நிறுவனங்களின் பங்கையும் சுட்டிக்காட்டினார்.
ரஷ்யாவின் மிகப்பெரிய கட்டுமான சங்கங்களில் ஒன்றான தமது அமைப்பு, வீடமைப்பு, சிவில் பொறியியல், தொழில்முறை கட்டுமானத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 105 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக NOSTROY தலைவர் ஆண்டன் நிகோலேவிச் குளுஷ்கோவ் (Anton Nikolaevich Glushkov) தெரிவித்தார்.
கட்டுமானத் துறையில் தொழிலாளர் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக NOSTROY அமைப்பு இதற்கு முன்னர் இந்தியாவுடன் இதேபோன்றதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பின்போது, சர்வதேச தொழிலாளர் சந்தைகளுக்கு கட்டுமானத் தொழிலாளர்களை வெற்றிகரமாக அனுப்பி வைத்ததில் இலங்கையின் அனுபவம் மற்றும் இலங்கைத் தொழிலாளர்களின் திறன் மற்றும் தொழில்முறை சார்ந்த நற்பெயர் குறித்து SLBFE அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் (SLFEA) (தனியார்) நிறுவனத்திற்கும் NOSTROY அமைப்பிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தன.
இந்த ஒப்பந்தத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் தலைவர் ஆனந்தலால் ஹெட்டியாராச்சி மற்றும் NOSTROY தலைவர் ஆண்டன் நிகோலேவிச் குளுஷ்கோவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ரஷ்யாவின் கட்டுமானத் துறையில் உள்ள தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதையும் பணியமர்த்துவதையும் இலகுபடுத்தும் வகையில் இரு அமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்குகிறது.
இந்த ஒப்பந்தம் இலங்கைத் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.










