இன வெறிக்கு எதிர்ப்பு – மைதானத்தில் முழங்காலிட்ட கிரிக்கெட் வீரர்கள்

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி வீரர்கள் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிரான தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று துவங்கியது.

இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் என்று அறிவிக்கபட்டு இருந்தது. முதல் 2 நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்பு உள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்தன. அதன்படியே அங்கு மழை குறுக்கிட்டதால் நாணயச்சுழற்சி போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதன்பின்னர் போட்டி தொடங்கியது. இதில், கொரோனா வைரசால் பலியானோர் மற்றும் கடந்த வாரம் தனது 95வது வயதில் மரணமடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவர்டன் வீக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், போட்டி தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோன்று, போட்டி நடைபெறும்பொழுது, இனவெறிக்கு எதிரான இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தங்களது ஜெர்சியில் கருப்பினர்களுக்கு ஆதரவு தரும் சின்னம் பொறிக்கப்பட்டு இருக்கும் என இரு அணிகளும் முன்பே அறிவித்திருந்தன.

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் இனவெறிக்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், கருப்பின மக்களின் வாழ்வும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், போட்டி நடைபெறும் மைதானத்தில் முழங்காலிட்டனர். அவர்களுடன் போட்டி நடுவர்களும் முழங்காலிட்டு இருந்தனர்.

Related Articles

Latest Articles