மாணிக்கக்கல் மாபியாக்களால் நோர்வூட்டில் சுற்றாடல் பாதிப்பு

நோர்வூட் தகனசாலைக்கு செல்லும் பாதையில் நேற்றிரவு (01) பாரிய இரு குழிகள் தோண்டப்பட்டு, மண் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபடும் கும்பலே இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

தமது தோட்டத்திலுள்ள தேயிலை மலை மற்றும் தகனசாலைக்கு செல்லும் பாதையில் கடந்த இரு நாட்களாக சிலர், பாரிய குழிகளைத் தோண்டி, மாணிக்கக்கல் படிமம் அடங்கிய மண்ணை அள்ளிச் சென்றுள்ளதாகவும், இது தொடர்பில் நோட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தோட்டக் காவலாளி தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையால் பாதை கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், தற்போது அப்பாதையில் வாகனமொன்றுகூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து நோர்வுட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் வினவியபோது,

“ ஒக்டோபர் 01-ஆம் திகதி இரவு அப்பகுதியில் திடீர் சோதன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும், பொலிஸாரைக் கண்டதும் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்” எனத் தெரிவித்தார்.

எனினும், கடத்தல்காரர்களால் எடுத்துச் செல்வதற்காக
மூடைகளில் நிரப்பப்பட்டிருந்த 40 மூடை மாணிக்கக்கல் படிம மண் மற்றும் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபரகணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் வழக்கு நடவடிக்கைக்காக இன்று (02) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles