பறவைகளின் சொர்க்க பூமிக்கு நேர்ந்த அவலம்: காணாமல்போகும் அபாயத்தில் முக்கிய ஏரி

கிரீஸின் வடபகுதியில் அமைந்திருந்த கொரோனியா (Koroneia) ஏரி, கடும் வறட்சி தொடங்குவதற்கு முன்பாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு முக்கியமான ஈரநிலமாகத் திகழ்ந்தது. ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள், பூநாரைகள் (Flamingos), சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் புகலிடமாகவும் அது விளங்கியது.

ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக நிலவும் குறைவான மழைப்பொழிவு மற்றும் அளவுக்கு அதிகமான நீர்ப்பாசனம் காரணமாக, ஒரு காலத்தில் கிரீஸின் ஐந்தாவது பெரிய ஏரியாக இருந்த கொரோனியா, தற்போது தன் பழைய அளவில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவாகச் சுருங்கிவிட்டதாக ஏதென்ஸ் தேசிய வானியல் ஆய்வு மையம் (National Observatory of Athens) தெரிவித்துள்ளது.

எஞ்சியிருக்கும் நீர் முழுவதும் சகதி நிறைந்த குட்டைகளாக மாறியுள்ளன. சூரியனின் கடும் வெப்பத்தால் காய்ந்து, பிளவுபட்ட பரந்த சேற்று சமவெளியாகவே ஏரியின் பெரும்பாலான பகுதிகள் காட்சியளிக்கின்றன.

வடக்கு கிரீஸில் காலநிலை மாற்றமும் வறட்சியும் ஏற்படுத்தியுள்ள பேரழிவின் அடையாளமாகப் பகுதி மாறியுள்ளது. இங்கு மழைப்பொழிவு மிகவும் சீரற்றதாக மாறியுள்ளதால், பயிர்களுக்கு ஏரி நீரைப் பாய்ச்ச விவசாயிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கோடைக் காலத்தில் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளைப் பாதித்த கடும் வெப்ப அலையும் குறைவான மழைப்பொழிவும், நதிகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டத்தைப் பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்குத் தாழ்த்தியுள்ளன. இது வர்த்தகப் போக்குவரத்து மற்றும் ஆற்றல் உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஏரிக்கரையோர கிராமமான ஆகியோஸ் வாசிலியோஸின் (Agios Vassilios) தலைவர் கோஸ்டாஸ் ஹட்ஜிவவுல்கரிடிஸ் கூறுகையில், “மீனவர்கள், நிறைந்து வழியும் நீர், எழில் கொஞ்சும் பூங்கா மற்றும் பறவைகளின் அழகிய காட்சிகளோடு இந்த ஏரியை அதன் பொற்காலத்தில் நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று நாம் காண்பதோ வெறும் ஏமாற்றமே” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

2015-2016 மழைக்காலத்திற்குப் பிறகே ஏரியின் நீர் வளம் குறையத் தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நிலவிய குறைந்த மழைப்பொழிவும், இயல்பை விட அதிகமான வெப்பமும் ஏரி நீரை மட்டுமன்றி, அதற்கு நீர் ஆதாரமாக விளங்கிய ஊற்றுகளையும் வற்றச் செய்துவிட்டன.

ஏதென்ஸ் தேசிய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, 2016-ஆம் ஆண்டில் 34.4 சதுர கிலோமீட்டராக இருந்த இந்த ஏரியின் பரப்பு, தற்போது வெறும் 2.7 சதுர கிலோமீட்டராகச் சுருங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

தெசலோனிகியில் உள்ள தேசிய ஈரநில மையத்தின் நீர்வள மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத் துறைத் தலைவர் டிமிட்ரிஸ் பாபாடிமோஸ் பேசுகையில், “ஏரியின் நீர்மட்டம் சரிவடைவதற்கு மிக முக்கியக் காரணம் அதன் வடிநிலப் பகுதியில் பொழியும் வருடாந்திர மழைப்பொழிவு குறைந்ததே ஆகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்கு சராசரியாக 400 மில்லிமீட்டர் (15.75 அங்குலம்) மழையே பதிவாகியுள்ளது. இது முந்தைய தசாப்தங்களை விட சுமார் 150 மில்லிமீட்டர் குறைவாகும். மேலும், சமீபத்திய ஆண்டுகளில் உள்ளூர் சராசரி வெப்பநிலை உயர்ந்துள்ளதால், நீர் ஆவியாதலின் அளவு ஆண்டிற்கு 100 முதல் 150 மில்லிமீட்டர் வரை அதிகரித்துள்ளது” என்றார்.

அளவுக்கு அதிகமான நீர்ப்பாசனம், சட்டவிரோத நீர் கிணறுகள் அமைத்தல் மற்றும் மாசுபாட்டிலிருந்து கொரோனியா ஏரியைப் பாதுகாக்க கிரீஸ் அரசு தவறிவிட்டதாக 2013-இல் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதைத் தொடர்ந்து, நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கிரீஸ் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நீர்வளப் பொதுச்செயலாளர் பெட்ரோஸ் வரெலிடிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles