“மலையக மக்கள் இந்நாட்டிற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. அவர்கள் இந்நாட்டிற்காக இதுவரை சுமார் 300 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வருமானத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். இருப்பினும், அவர்களுக்கெனச் சொந்தமாக வீடோ, காணியோ அல்லது முகவரியோ இல்லாத நிலை காணப்படுகின்றது. அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்:
“மலையக மக்களுக்கு ஆரம்பத்தில் 7 பேர்ச்சர்ஸ் காணியை மட்டுமே வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அதனை 10 பேர்ச்சர்ஸாக உயர்த்தியுள்ளோம். தற்போது அவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மண்சரிவு அபாயப் பகுதிகளில் வாழும் மக்களுக்கும், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், சுமார் 4,000 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக இந்திய அரசிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன், மலையக மக்களுக்காக ‘ஹட்டன் பிரகடனத்தில்’ அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்குப் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
