பதுளை பிரதேச சபை பிரிவில் உள்ள வேவெஸ்ஸத் தோட்ட மத்திய பிரிவில் செய்கைப் பண்ணப்பட்டுள்ள 27 ஹெக்டேயர் இறப்பர் தோட்டத்தை தனியாருக்கு உபகுத்தகைக்கு வழங்க தோட்ட முகாமையும் பலாங்கொட பிளான்டேஷன் கம்பனி நிர்வாகமும் மேற்கொண்டு வரும் முயற்சியை தாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் குறித்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ் தெரிவிக்கின்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;
” தேயிலை தோட்டங்களை இறப்பர் தோட்டங்களாக மாற்றும் செயற்பாட்டை பலாங்கொட பிளான்டேஷன் கம்பனி தங்கள் நிர்வாகத்தின் கீழ் வரும் தெளிவத்தை, கலன், வேவெஸ்ஸ, ஸ்பிரிங்வெளி மற்றும் கிளன்-அல்பின் ஆகிய தோட்டங்களில் மேற்கொண்டது.
பெருந்தோட்டங்களில் தொடரும் தொழிலாளர் வெளியேற்றம், வேலை நாள் குறைப்பு, பொருளாதார பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை நீடித்து வருகின்றது.
எனினும் இன்னும் குறிப்பிட்ட அளவிலான தொழிலாளர்கள் தோட்டங்களில் தொடர்ந்தும் தொழில் புரிந்து வருகின்றனர்.
வேவெஸ்ஸ தோட்ட மத்திய பிரிவில் உள்ள தொழிலாளர்கள் இறப்பர் தோட்டத்தில் நிர்வாகம் வழங்கும் அறிவுறுத்தலுக்கு அமைய இறப்பர் பால் வெட்டும் பணியையும், இதர பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சேகரிக்கப்படும் இறப்பர் பால் படல்கும்புர பகுதிக்கே விநியோகிக்கப்படுகிறது. தோட்ட நிர்வாகம் வேலை நாட்களை வழங்குவதில் உள்ள சிக்கல், இதர காரணங்களை கூறி தோட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இவ்விடயம் தொடர்பாக எமது தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளோம்.
தோட்ட நிர்வாகத்திடம் பால் வெட்டும் தொழிலாளர்களுக்கு இதர வேலைகளையும் வழங்கி 20 நாட்களுக்கு அதிகமாக வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இக்கோரிக்கை தொடர்பாக சாதகமான பதில் கிடைத்துள்ளது. மேலும் இறப்பர் தோட்டங்களை துப்பரவு செய்து தொழிலாளர் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்தல், முறையான பராமரிப்பு என்பன தொடர்பாகவும் சுட்டிக் காட்டியுள்ளோம்.
குறித்த பேச்சுவார்த்தையில் தனியாருக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான முயற்சிக்கு முட்டுக்கட்டை இட்டுள்ளோம். எவ்வாறாயினும் தோட்டங்களை உப குத்தகைக்கு வழங்க தனியார் கம்பனிகள் எடுக்கும் எந்த முயற்சிக்கும் இடமளிக்காது வன்மையாக எதிர்த்து தொழிலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம் என்றார் வடிவேல் சுரேஷ்.
பசறை நிருபர்
