“நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்றாலும் அதன் தாக்கம் அரசை சும்மா விடாது”

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டாலும்கூட, அதனால் ஏற்படும் அரசியல் தாக்கங்களை எதிர்காலத்தில் அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி. தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:

“ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலேயே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும், அது அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய முழுமையான பொதுமன்னிப்பாக இருக்கவில்லை.

ஆனால், தற்போதைய அநுர ஆட்சியில் அவருக்கு முழுமையான பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான், ரஞ்சன் ராமநாயக்க தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவாகக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.

நீர்கொழும்பு சிறைச்சாலைச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்பதை விட, அதற்குப் பொறுப்புக்கூறுவதே அரசாங்கத்திற்கு மேலானது. இச்சம்பவம் நடந்த முதல் நாளிலேயே மோதலில் ஈடுபட்ட கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றியிருந்தால், இந்த விபரீதத்தையும் பாரிய அனர்த்தத்தையும் தடுத்திருக்கலாம்.

இதனை ஒரு சாதாரண வன்முறை என்று கடந்து போக முடியாது, இது ஒரு திட்டமிட்ட படுகொலையாகும். எனவே, இந்த உயிர் இழப்புகளுக்கு அரசாங்கமே முழுமையாகப் பொறுப்புக்கூற வேண்டும்.

இதன் காரணமாகவே நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர முன்னின்று வருகிறோம். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருக்கும் பெரும்பான்மையால் இப்பிரேரணை வெற்றிபெறாது என்பது எமக்கும் தெரியும்.

எனினும், இந்த விவாதத்தின் மூலம் அம்பலமாகும் உண்மைகளும், அதனால் ஏற்படும் அரசியல் தாக்கங்களின் பிரதிபலனும் எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்திற்குப் பாதகமாகவே அமையும்” என்றார் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி.

Related Articles

Latest Articles