காலாவதியான மருந்துகளை வைத்திருந்தமை மற்றும் இரத்தப் பரிசோதனைகளுக்கு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தமை உள்ளிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) சட்டத்தை பாரதூரமாக மீறிய குற்றத்துக்காக இரு மருத்துவ நிறுவனங்களுக்கு யாழ்ப்பாணம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் மொத்தம் ரூ. 400,000 அபராதம் விதித்துள்ளது.
ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை புலனாய்வு அதிகாரிகளால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
யாழ். திருநெல்வேலியிலுள்ள Northern Central Hospitals (Pvt) Ltd இல் ஜூலை 29 அன்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, காலாவதியான கண் அறுவை சிகிச்சை மருந்துகள், காலாவதியான ஈதர் திரவம் (Ether Liquid), ஹைட்ரஜன் பெராக்சைட் (Hydrogen Peroxide), அத்துடன் காலாவதியான அறுவை சிகிச்சை உபகரணங்கள் என்பன புலனாய்வாளர்களால் கண்டறியப்பட்டன. இந்நிறுவனம் மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதை அடுத்து, ஒரு குற்றச்சாட்டிற்கு ரூ. 100,000 வீதம் மொத்தம் ரூ. 300,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நாவலர் வீதி New Sun Rise Medi Clinic இல் ஜூலை 14 அன்று சோதனையிடப்பட்டபோது, முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (Full Blood Count) நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்சக் கட்டணமான ரூ. 400 ஐ விட அதிகமாக, ரூ. 550 கட்டணம் வசூலித்து இலக்கம் 67 கட்டளையை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் 60(6) ஆம் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட சிறப்பு உத்தரவில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரு நிறுவனங்களுக்கும் எதிரான தீர்ப்பு விபரங்களை பத்திரிகைகளில் வெளியிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் அல்லது காலாவதியான மருந்துகள் மற்றும் உபகரணங்களை வைத்திருக்கும் மருத்துவமனைகள், கிளினிக் அல்லது ஆய்வகங்கள் குறித்து 1977 என்ற உடனடி அழைப்பு இலக்கம் (Hotline) ஊடாகத் தெரிவிக்குமாறும், விழிப்புடன் இருக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.










