கடுவெலயில் சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு

கடுவெல பிரதான பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற சந்தேகத்திற்கிடமான தீவைப்புச் சம்பவத்தில் சொகுசு பேருந்து ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெல பொலிஸாரின் கூற்றுப்படி, வாராந்த சந்தை மைதானத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்திற்கு, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான இந்த பேருந்து கடுவெல – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை வீதியில் சேவையில் ஈடுபட்டு வந்த ஒன்றாகும்.

இந்த தீ விபத்தில் சொகுசு பேருந்து முற்றாக நாசமடைந்ததுடன், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடுவெல – கொள்ளுப்பிட்டி வீதியில் இயங்கும் இரண்டு சாதாரண சேவைப் பேருந்துகளும் லேசான சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம் அதிகாலை 2:30 மணி முதல் 2:45 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரால் சந்தேகநபர்கள் பார்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூச்சலிட்டதை அடுத்து, சந்தேகநபர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

தாக்குதல் நடந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட பேருந்தின் சாரதியும் நடத்துனரும் பேருந்திற்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். சக ஊழியர்கள் எச்சரித்ததை அடுத்து அவர்கள் காயங்களின்றி தப்பினர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தீவைப்பு சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles