யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இன்று அதிகாலை வேளையில் மருந்து களஞ்சியப் பகுதியில் திடீரெனத் தீப்பரவல் ஆரம்பமானது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ். மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், இராணுவத்தினர், விமானப் படையினர், பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் எனப் பல தரப்பினர் சுமார் 5 மணிநேரத்துக்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மருந்து களஞ்சியசாலைக்குள் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய அமிலங்கள் மற்றும் இரசாயனப் பொருள்கள் காரணமாக தீ மிக வேகமாகப் பரவியது. இதனால் கட்டடத்தின் பெரும்பகுதி சேதமடைந்ததுடன், களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அத்தியாவசிய மருந்துகள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இன்று பகல் முழுவதும் களஞ்சியசாலையைச் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியில் மருந்துகளைப் பாதுகாப்பதற்காக அண்மையில் குளிரூட்டப்பட்ட அறை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

எனினும், இது மின்கசிவா? அல்லது சதியா? என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தத் தீ விபத்தால் ஏற்பட்ட மொத்த நட்டம் இன்னும் கணக்கிடப்படவில்லை.

வடக்கு மாகாணத்தின் பிரதான வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இந்த அனர்த்தம் நோயாளர்களுக்கான மருந்து விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Related Articles

Latest Articles