இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு, தாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு பெண்களை அழைத்து வந்ததற்காக, ஆஸ்திரேலிய கால்பந்து லீக் (AFL) தொடரின் முன்னணி அணியான ‘சிட்னி ஸ்வான்ஸ்’ (Sydney Swans) அணியைச் சேர்ந்த 5 வீரர்கள் எஞ்சிய பருவம் முழுவதற்கும் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐசக் ஹீனி Isaac Heeney, சாட் வார்னர் Chad Warner, நிக் பிளேக்கி Nick Blakey, ஜேம்ஸ் ஜோர்டன் James Jordon மற்றும் ரிலே பைஸ் Riley Bice ஆகிய ஐந்து வீரர்களே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியைத் தொடர்ந்து, இவர்கள் தங்கியிருந்த ‘புல்மேன் ஹோட்டலில்’ (Pullman Hotel) திங்கள்கிழமை அதிகாலை பாலியல் அத்துமீறல் சம்பவம் நடந்ததாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து தொடர்ந்து, மெல்போர்ன் பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
எனினும், இதுவரை வீரர்கள் எவரும் கைது செய்யப்படவோ அல்லது அவர்கள் மீது உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவோ இல்லை.
பொலிஸார் தங்களது விசாரணையைத் தனியாகத் தொடரும் நிலையில், அணியின் ஒழுக்க விதிகளை மீறியதற்காகவே இந்த நடவடிக்கையை அணி நிர்வாகம் எடுத்துள்ளது.
வீரர்கள் மற்றும் நிர்வாகம் மன்னிப்பு
இச்சம்பவம் குறித்து சிட்னி ஸ்வான்ஸ் இணையதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள 5 வீரர்களும், “எங்கள் குடும்பத்தினர், ரசிகர்கள், சக வீரர்கள், அணி நிர்வாகம் என அனைவரிடமும் நாங்கள் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறோம். அணியின் இந்த தண்டைனையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
நடப்பு பருவத்தில் புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ள சிட்னி ஸ்வான்ஸ் அணிக்கு, குறிப்பாக முன்னணி நட்சத்திரங்களான ஐசக் ஹீனி மற்றும் சாட் வார்னர் ஆகியோரின் இந்தத் தடை, இறுதிப் போட்டிகளுக்கு முன்பாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
( AFL (Australian Football League) என்பது ஆஸ்திரேலியாவில் ஆடப்படும் ஒரு தனித்துவமான கால்பந்து தொடர்தான். ஆனால், இது நாம் வழக்கமாகப் பார்க்கும் சர்வதேச கால்பந்து (Soccer) போட்டிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
ஆஸ்திரேலியாவில் இப்போட்டியை “Australian Rules Football” (ஆஸ்திரேலிய விதிகளுடனான கால்பந்து) அல்லது சுருக்கமாக “Aussie Rules” / “Footy” என்று அழைக்கிறார்கள்.











