நுவரெலியா காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் (LRC) கள அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர், ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (23) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நூவரெலியா காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் பணியாற்றிய காலத்தில், நோர்வூட், ஹட்டன் மற்றும் ருவன்புர ஆகிய பகுதிகளில் காணித் துண்டுகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் இ முன்னாள் நகர சபை உறுப்பினர் ஒருவரை பயன்படுத்தி, சுமார் 70 பேரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக வெள்ளிக்கிழமை (23) ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கமைய பொலிஸில் முன்னிலையான அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபருக்கு பணம் வழங்கிய முன்னாள் நகர சபை உறுப்பினர், ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் காணிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி இவர்கள் இருவரும் பல்வேறு நபர்களிடம் பணத்தைச் சேகரித்துள்ள போதிலும், இதுவரை எவருக்கும் காணிகள் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளதாக இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிதி மோசடியுடன் தொடர்புடைய நுவரெலியா காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் மேலும் பல முன்னாள் அதிகாரிகளைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.










