போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தாக்குதல்களை நடத்தாத நிலையில், ஈரான் உடனான மோதல் குறித்து “மிகவும் இணக்கமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என்று அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“நல்லதொரு தீர்வு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று நான் நினைக்கிறேன் ” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தற்போதைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், சண்டை நிறுத்தத்திற்கு முன்பு “நாங்கள் என்ன செய்து கொண்டிருந்தோமோ அதையே மீண்டும் செய்யத் தொடங்குவோம்” என்றும் அவர் எச்சரித்தார்.
ஆனால், தங்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்று ஈரான் (தெஹ்ரான்) மறுத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் பேச்சுவார்த்தைக்கு மற்றொரு வாய்ப்பளிக்குமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டதாலேயே, வெள்ளிக்கிழமையன்று ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்ததாக டிரம்ப் கூறினார்.
ஈரானும் தனது தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஜூன் மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முற்றிலும் சீர்குலைக்கும் வகையில், கடந்த இரண்டு வாரங்களாக தினமும் அமெரிக்கத் தாக்குதல்களும், அதற்குப் பதிலடித் தாக்குதல்களும் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த அமைதி நிலவுகிறது.
உலகளாவிய எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமான ‘ஹார்முஸ் நீரிணையில்’ (Strait of Hormuz) வணிகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் திறனைக் குறைப்பதே தங்கள் தாக்குதல்களின் நோக்கம் என்று அமெரிக்க ராணுவம் அப்போது தெரிவித்திருந்தது.
