பாலின மாற்றச் சுற்றறிக்கைகளுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு தள்ளுபடி

மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் தனிநபர்கள் தங்கள் பாலின அடையாளத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் அரசாங்கச் சுற்றறிக்கைகளின் சட்டபூர்வ தன்மையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை இலங்கை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ஓய்வுபெற்ற இலங்கை விமானப்படை வீரர் சாந்த ஜெயதிலக்க என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பலர் இதில் எதிர்மனுதாரர்களாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.

தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் நீதிபதி அர்ஜுன ஒபேசேகர ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, காலாவதியான காலக்கெடு (time-barred) உள்ளிட்ட முதற்கட்ட ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

தற்போதைய நிர்வாகம் உட்பட அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள், சட்டத்திற்குப் புறம்பான முறையில் பாலின மாற்ற நடைமுறைகளுக்கு வழிவகுத்துள்ளதாக மனுதாரர் தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

உயிரியல் ரீதியான அடிப்படை எதுவுமின்றி, அறுவை சிகிச்சை மூலம் ஒருவர் தனது பாலினத்தை ஆணியிலிருந்து பெண்ணாகவோ அல்லது பெண்ணிலிருந்து ஆணாகவோ மாற்றுவதற்கு இலங்கைச் சட்டம் அனுமதிக்கவில்லை என்று மனுதாரர் வாதிட்டார்.

மேலும், 2016-ஆம் ஆண்டு அப்போதைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், மனநல மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தனிநபர்கள் தங்களது பாலின அடையாளத்தை மாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related Articles

Latest Articles