மலையகத்தில் விவசாயக் கல்லூரியொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
டிக்கோயா, தரவளை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” ஒரு காலத்தில் சௌமியமூர்த்தி தொண்டமானை விமர்சித்தனர், அதன் பின்னர் எனது தந்தையை விமர்சித்தனர், இறந்த பின்புகூட அவரை விட்டுவைக்கவில்லை. இன்று என்னை விமர்சிக்கின்றனர். சின்ன பையன் கைகளில் மலையக தலைமைத்துவத்தை வழங்கமுடியுமா என கேட்கின்றனர். இது குறித்து நான் கவலைப்படுவதில்லை. ஏனெனில் என்னை விமர்சிக்க, விமர்சிக்க நான் வளர்ந்துகொண்டே இருப்பேன். எனவே, என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன்.
அடுத்த 10 வருடங்களில் மலையகத்தில் சுற்றுலாதுறைசார் அபிவிருத்திகள் அதிகரிக்கவுள்ளன. அவ்வாறு நடைபெறும்போது நமது இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும். கடந்த இரண்டு வருடங்களில் மூன்று ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 10 வீதமானோருக்கே வேலை வாய்ப்பு. அதுவும் முன்னேறமுடியாத வகையில் முடக்கியே வைக்கின்றனர். இந்நிலைமை மாறவேண்டும்.
மலையக பல்கலைக்கழகம் அமைக்கப்படும்போது ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான கற்கை நெறியையும் கோரியுள்ளோம். அதேபோல் மலையகத்தில் விவசாய கல்லூரியொன்றை அமைக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக அது அமைக்கப்படும். ஏனெனில் இலங்கையில் எதிர்காலம் இனிவரும் காலப்பகுதியில் மலையகத்தை நம்பியே இருக்கப்போகின்றது. மரக்கறி தட்டுப்பாடு வரலாம். இங்குதான் அதிகம் உற்பத்திசெய்யப்படும். வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இன்று நாம் ஓட்ட பந்தயத்தில் ஈடுபட்டுள்ளோம். ஒரு புறத்தில் கம்பனி காரர்கள். மறுபுறத்தில் நாம் . கம்பனிகாரர்களிடம் பணபலம் இருக்கின்றது. ஆள் பலம் இல்லை. எம்மிடம் ஆள்பலம் இருக்கிறது. பண பலம் இல்லை. நாளை அவர்கள் தேயிலை தோட்டங்களில் விவசாயம் செய்யலாம். அதற்கு முன்னர் நாம் முந்திக்கொள்ளவேண்டும். சுயதொழிலில் ஈடுபட்டு நாமும் முதலாளிகளாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்துகொடுப்போம்.” – என்றார்.
பொகவந்தலாவ நிருபர் – எஸ். சதீஸ்