அடிமட்ட தொண்டர்களுக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் கதவு திறந்தே உள்ளது என பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள அறிவிப்பையடுத்து, காங்கிரஸ் என்ற தாய்க்கட்சிக்குள் மீண்டும் வருவதற்கு பலரும், தோட்டத் தலைவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப்பீடத்துக்கும், அடிமட்ட தொண்டர்களுக்குமிடையிலான உறவு கட்டியெழுப்பப்படாததாலேயே கடந்த காலங்களில் கடும் அதிருப்தியில் ஆதரவாளர்கள் சிலர் காங்கிரஸை விட்டுவெளியேறினர். தலைவரை நேரில் சந்திக்க முடியவில்லையே என்ற ஆதங்கள் அவர்களுக்குள் இருந்தது. மற்றும்படி சலுகைகளுக்காக அவர்கள் வெளியேறவில்லை.
” தலைவரை சூழ இருந்த சிலரே மக்களுக்கும் அவருக்குமிடையிலான உறவை துண்டித்ததுடன், தேசிய தலைவரை ஒரு மாவட்டத்துக்குள்ளேயே முடக்கினர்.” என்று பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார். இளைஞர் அணி பொதுச்செயலாளராக அவர் பதவியேற்றப்பின்னர் இந்நிலைமையை மாற்றியமைக்க ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே தற்போது எங்கு தவறு இடம்பெற்றுள்ளது என்பதை பகிரங்கமாக சுட்டிக்காட்டி, அடிமட்ட தொண்டர்களுக்காக காங்கிரஸ் கதவு திறந்தே உள்ளது என்ற அறிவிப்பை பெருந்தன்மையோடு பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் விடுத்துள்ளார்.
ஜீவன் தொண்டமானின் அண்மைக்கால அரசியல் அணுகுமுறைகளால் மகிழ்வுற்றுள்ள மக்கள் அவருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துவிட்டனர்.
அத்துடன், காங்கிரஸில் இருந்து சென்ற மக்களும் மீண்டும் இணைவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். தோட்டத் தலைவர்கள் ஊடாக பொதுச்செயலாளருக்கு இது விடயம் தொடர்பில் தூது அனுப்பியுள்ளனர்.
மக்களால் வழங்கப்பட்ட மேற்படி தகவலை தோட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். இதன்படி தோட்டவாரியாக நடைபெறும் கூட்டங்களின்போது அவர்கள், பொதுச்செயலாளரை நேரில் சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.
அதேவேளை, காங்கிரஸின் இருந்து – வளர்ந்து – முதுகில்குத்திவிட்டு வெளியேறிய அரசியல்வாதிகளுக்கு கட்சிக்குள் மீண்டும் இடமில்லை என பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.