குறைகூறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எதிர்காலத்தில் தம்மால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் அரசியலானது, மலையகத்தில் புதியதொரு அரசியல் கலாச்சாரத்துக்கு வித்திடும் என்று மலையக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், ஜீவன் தொண்டமானின் உரைகளை உன்னிப்பாக அவதானிக்கும்போது, நாளாந்தம் அவரால் புதுவிதமான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன எனவும், அவையாவும் நடைமுறைக்கு சாத்தியமானவையாகவே காணப்படுகின்றன எனவும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஆரம்ப காலக்கட்டத்தில் இலங்கையின் பொருளாதாரமானது தேயிலை ஏற்றுமதியையே பெருமளவில் நம்பியிருந்தது. இன்றளவிலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பை வழங்கிவருகின்றனர். அதேபோல் சுற்றுலாத்துறையும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பக்கபலமாக மாறியுள்ளது.
குறிப்பாக இலங்கையிலுள்ள பிரதான சுற்றுலாத்தலங்களுள் நுவரெலியா மாவட்டமும், பதுளை மாவட்டமும் பிரதான இடத்தை வகிக்கின்றன. இவ்விரு மாவட்டங்களிலேயே அதிகளவான மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர்.
இந்நிலையில் சுற்றுலாத்துறையைப் பயன்படுத்தி பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையானது காலத்திற்கேற்றதொன்றாகும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
“ மலையக இளைஞர், யுவதிகள் ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பில் கற்கவேண்டும். இதற்கு வசதியாக மலையக பல்கலைக்கழகம் அமையும்போது மேற்படி கற்கை நெறியையும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
இதன்மூலம் சிற்றூழியர்கள் என்ற நிலையில் இருந்து முகாமைத்துவ மட்டத்துக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பு எமது இளைஞர்களுக்கு இருக்கின்றது. இந்த விடயத்தை அடையாளம் கண்டு அதற்கான வேலைத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்ற ஜீவன் தொண்டமானின் எண்ணத்தை பாராட்டியே ஆகவேண்டும்.
அத்துடன், கொவிட் – 19 பிரச்சினையைடுத்து தேசிய உற்பத்தி தொடர்பிலும், தேசிய பொருளாதாரம் சம்பந்தமாகவும் உலக நாடுகள் கவனம் செலுத்திவருகின்றன.இலங்கையும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
எமது நாட்டில் நுவரெலியா மாவட்டத்திலேயே தரமான மரக்கறிவகைகள் பயிரிடப்படுகின்றன. சிறந்த வருமானத்தை உழைத்துதரக்கூடிய துறையாகவும் அது விளங்குகின்றது. எனினும், அதுசார்ந்த தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியிலான விளக்கங்கள் இன்மையால் உச்ச பயனை விவசாயிகளால் பெறமுடியாதுள்ளது.
இந்நிலையில் இக்குறையை தீர்த்து, சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் மலையக பல்கலைக்கழகத்துக்கு இணையாக விவசாய கல்லூரியொன்றும் அமைக்கப்படும் என்ற ஜீவன் தொண்டமானின் யோசனையானது அத்தியாவசியமானதொன்றாகும்.” எனவும் மலையக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறுதான் அரசியல் இருக்கவேண்டும்.விமர்சிப்பதைவிடுத்து ஜீவன் தொண்டமான்போல் அனைவரும் தமது திட்டங்களை விளக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஜீவன் போன்ற துடிப்புள்ள இளைஞர்களே மலையக அரசியலுக்கு தேவையெனவும் அவர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.