மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குக!
கொழும்பில் எதிர்வரும் 05 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள “நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு ஐக்கிய சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என அதன் பொதுச்செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.
“மலையகத் தமிழர்” என அடையாளம் வழங்குவதற்கு அப்பால் அவர்கள் அர்த்தமுள்ள பிரஜைகளாக வாழ்வதற்குரிய நிலம் உட்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் சிறிதுங்க ஜயசூரிய கூறியவை வருமாறு,
“இலங்கையென்பது ஜனநாயக நாடு. சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை இருக்கின்றது. சட்ட ரீதியிலான பிரச்சினையெனில் பொலிஸார் நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கலாம். அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் பெருந்தோட்டப் பகுதிகளில் பொலிஸாரின் செயலை செய்வதற்கு கூலிப்படை களமிறங்குவதை அனுமதிக்க முடியாது.
நீலகாமம் போராட்டமானது இனக்குழுமங்களுக்கு எதிரானது அல்ல. அது அடக்குமுறைக்கு எதிரானது. அராஜகத்துக்கு எதிரானது. அநீதிக்கு எதிரானது. எனவே, அனைவரும் இந்த அறவழி போராட்டத்துக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும். அந்தவகையில் எமது ஐக்கிய சோசலிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்கும்.
மலையக மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்கான எமது குரல் ஓங்கி ஒலிக்கும்.” என்றார் சிறிதுங்க ஜயசூரிய.
