செம்மணி விவகாரத்தில் உண்மையை கண்டறிய அரசு முழு ஒத்துழைப்பு

செம்மணி விவகாரத்தில் உண்மையைக் கண்டறிவதற்குக் அரசாங்கத் தரப்பில் அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என்றும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“தேசிய நல்லிணக்கம் என்பது மிக முக்கியமானது. அதனை ஏற்படுத்துவதற்காக அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அனைத்து மக்களினதும் ஜனாதிபதி ஆவார். வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆட்சிக்கு வடக்கிலிருந்தும் பலத்த ஆதரவும் வெற்றியும் கிடைக்கப்பெற்றது.

காணி விடுவிப்பு உட்பட பல வழிகளிலும் நல்லிணக்கத்தை எட்டுவதற்கான முயற்சிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் வடக்கிலும், தெற்கிலும் பெற்றோர் இன்றும் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) போதிய ஆளணி வளம் இருக்கவில்லை. நாம் உடனடியாகப் புதிய ஆட்சேர்ப்புகளைச் செய்து, 60 பேரை அதில் இணைத்தோம்.

மேலும், இதற்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன. தற்பொழுது தலா மூன்று பேர் கொண்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இதன் மூலம், நிலுவையிலுள்ள 11,000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று, செம்மணி விவகாரத்திலும் உண்மையைக் கண்டறிவதற்குக் அரசாங்கத் தரப்பிலிருந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles