முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்பமான வானிலை தொடர்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மாவட்டங்களின் சில இடங்களில், மனித உடலால் உணரப்படும் வெப்பநிலையான ‘வெப்பச் சுட்டெண்’ (Heat Index) இன்று (13) ‘எச்சரிக்கை மட்டம்’ (Caution Level) வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பீட்டு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி இந்த வெப்பச் சுட்டெண் முன்னறிவிப்பு கணக்கிடப்படுகிறது. இதுவே மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து அத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடுவது தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்குமாறும், கடினமான வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.










