இந்த ஆண்டில் ஜெர்மனியில் அதிக வெப்பநிலை காரணமாகப் ஏறத்தாழ 10,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2016 இற்கு பிந்தைய எந்தவொரு ஆண்டை விடவும் அதிகமாகும் என ஜேர்மனியின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான பொது சுகாதார நிறுவனமான ரொபேர்ட் கோச் (Robert Koch Institute) மதிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் தொடக்கம் முதல் ஜூலை 19 வரையிலான காலத்தில் வெப்பம் காரணமாக 9,800 பேர் உயிரிழந்ததாக அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அதிகபட்சமாக 2018 ஆம் ஆண்டில் சுமார் 9,000 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன.
இந்த ஆண்டின் உயிரிழப்புகளில் 5,000 இற்கும் மேற்பட்டவை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதியில் வீசிய தீவிர வெப்ப அலையுடன் தொடர்புடையவை ஆகும். அக்காலத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை 42º செல்சியஸ் வரை எட்டியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘கோபர்நிகஸ் காலநிலை சேவை’ அமைப்பு, 2026 ஜூன் மாதமானது மேற்கு ஐரோப்பாவில் இதுவரை பதிவான மிக வெப்பமான ஜூன் மாதம் என்று கூறியுள்ளது.
மதிப்பிடப்பட்ட இறப்புகளில் 75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 7,900 பேர் ஆவர்.
இந்த புள்ளிவிவரங்களில் 85 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 5,420 பேரும், 75 முதல் 84 வயதுடையவர்கள் 2,460 பேரும், 65 முதல் 74 வயதுடையவர்கள் 1,260 பேரும் அடங்குவர்.
உயிரிழந்தவர்களில் சுமார் 630 பேர் 65 வயதிற்கும் குறைந்தவர்கள்.
சராசரி வெப்பநிலை 20º செல்சியஸைத் தாண்டும் வாரங்களில் மரணங்களின் எண்ணிக்கை வழக்கமாக கணிசமாக உயர்கிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மன் வானிலை சேவையால் இயக்கப்படும் 52 வானிலை மையங்களின் அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டே இதன் பகுப்பாய்வு உருவாக்கப்பட்டுள்ளது.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம், வெப்ப அலைகளை அடிக்கடி நிகழச் செய்வதாகவும், நீண்ட காலம் நீடிக்கச் செய்வதாகவும், தீவிரமடையச் செய்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது வெப்பம் தொடர்பான நோய்கள் மற்றும் மரணங்களின் ஆபத்தை உயர்த்துகிறது.
