நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மதியம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மவுஸ்சாகலை, காசல்ரீ, கென்யோன், புரோட்லேண்ட், லக்ஷபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் நீர்த்தேக்கங்களுக்கான நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளதுடன், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேக உயர்வைக் கண்டுள்ளது.
தொடர்மழை காரணமாகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகளும் பண்ணையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மழை தொடர்வதால் சாமிமலை ஓயா, மரே ஓயா, காட்மோர் ஓயா, சியத்தலகங்குல ஓயா, கெசல்கமு ஓயா, ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா மற்றும் டயகம பகுதியில் உற்பத்தியாகும் மகாவலி கங்கை உள்ளிட்ட நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.










