இலங்கையில் எச்ஐவி பாதிப்பு அதிகரிப்பு; கொழும்பு, கம்பஹாவில் அதிகம்

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், கொழும்பு – கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வைத்தியர் ஹேரத், 2023ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதாகவும், பெண்களை விட ஆண்களிடமே அதிகளவான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பாதுகாப்பற்ற உடலுறவு முறைகளே எச்.ஐ.வி பரவுவதற்கான முக்கிய காரணமாகத் தொடர்வதாகவும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களிடையே ஊசிகள் மற்றும் பிற ஊசி உபகரணங்களைப் பகிர்ந்துகொள்வதும் வைரஸ் பரவலுக்குப் பங்களிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எச்.ஐ.வி தொற்றை முற்றாகக் குணப்படுத்த முடியாது என்றும், தொற்றுக்குள்ளானவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மற்றும் வழக்கமான மருத்துவக் கண்காணிப்பைப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு – கம்பஹா மாவட்டங்களில் எச்.ஐ.வி, பாலியல் ரீதியாக பரவும் தொற்றுகள் (STIs) மற்றும் கல்லீரல் அழற்சி (Hepatitis) ஆகியவற்றைக் கண்டறிவதை மேம்படுத்துவதற்காக, தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் (National STD/AIDS Control Programme) ஒரு சிறப்பு நடமாடும் மருத்துவமனை திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், இலவச மற்றும் ரகசியமான பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.

பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தொடர்ந்து ஒப்பீட்டளவில் குறைந்த எச்.ஐ.வி பாதிப்பையே பதிவு செய்து வந்தாலும், புதிதாகப் பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக வைத்தியர் ஹேரத் தெரிவித்தார்.

“அறிக்கைகளின்படி, 2023ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்துள்ளதுடன், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் ஏற்கனவே அதிகமாகக் காணப்படுகின்றன. கொழும்பு – கம்பஹா மாவட்டங்களில் மக்கள் தொகை அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக, அங்கு தொடர்ந்து அதிகளவான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன,” என்றும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles