டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட் (Travel And Tour World – TTW) இதழ் வெளியிட்டுள்ள அண்மைய தரவரிசையின்படி, 2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவுக்கான 50 நாடுகள் (Food Destinations) பட்டியலில் இலங்கை பெயரிடப்பட்டு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
உலகளாவிய உணவுச் சுற்றுலாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நாடுகளை இந்த வருடாந்த பட்டியல் அங்கீகரிக்கிறது.
சமையல் பாரம்பரியம், பிராந்திய பன்முகத்தன்மை, தெரு உணவு கலாச்சாரம் (Street food culture), உயர்தர உணவகங்கள், உள்ளூர் மூலப்பொருட்கள், நிலையான தன்மை, பாரம்பரிய பானங்கள், கலாச்சார நம்பகத்தன்மை, ஒட்டுமொத்த உணவு அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் TTW இன் வல்லுநர்களால் இந்த தரவரிசைத் தொகுக்கப்பட்டது.
இலங்கை இப்பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது, இந்த நாட்டின் துடிப்பான சுவைகள், நறுமணமிக்க நறுமணப் பொருட்கள், புதிய கடல் உணவுகள், வெப்பமண்டல மூலப்பொருட்கள், தனித்துவமான பிராந்திய உணவுகளுக்குப் பெயர் பெற்ற அதன் வளமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட சமையல் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டுகிறது.
“விறுவிறுப்பான தெரு உணவு கடைகள் முதல் நேர்த்தியான கடலோர உணவகங்கள் வரை, நறுமணமிக்க நறுமணப் பொருட்கள், வெப்பமண்டல மூலப்பொருட்கள் மற்றும் பல நூற்றாண்டுகால கலாச்சார தாக்கங்கள் மறக்க முடியாத உணவு அனுபவங்களை உருவாக்கும் ஒரு துடிப்பான சமையல் தளமாக இலங்கை விளங்குகின்றது” என்று TTW குறிப்பிட்டுள்ளது.
பாரம்பரிய சோறு, கறி முதல் அப்பம், கொத்து, கடல் உணவு வகைகள் மற்றும் பலவிதமான இனிப்பு பலகாரங்கள் வரை, இலங்கையின் உணவு வகைகள் உலகம் முழுவதிலுமிருந்து வரும் உணவு ஆர்வலர்களைத் தொடர்ந்து ஈர்த்து வருகின்றன.
இலங்கை பற்றிய தனது சிறப்புப் பதிவின் ஒரு பகுதியாக, தீவு முழுவதிலும் கண்டிப்பாகச் செல்ல வேண்டிய 10 உணவுத் தலங்களை TTW சுட்டிக்காட்டியுள்ளது:
கொழும்பு – சோறு-கறி, கொத்து ரொட்டி, அப்பம் மற்றும் புதிய கடல் உணவுகளுக்குப் பெயர் பெற்றது.
காலி – கடல் உணவுகள், இலங்கை முறையிலான கறிகள் மற்றும் காலனித்துவ காலத்து உணவு அனுபவங்களுக்குப் பெயர் பெற்றது.
கண்டி – சோறு-கறி, பாரம்பரிய இனிப்புகள் மற்றும் உண்மையான உள்ளூர் உணவு வகைகளுக்குப் பிரபலமானது.
நீர்கொழும்பு – கடல் உணவு கறிகள், சுட்ட மீன் (grilled fish) மற்றும் lagoon சிறப்புகள் ஆகியவற்றிற்குப் புகழ்பெற்றது.
எல்ல – இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள், இலங்கை உணவு வகைகள் மற்றும் மலைநாட்டு உணவு அனுபவங்களை வழங்குகிறது.
யாழ்ப்பாணம் – நண்டுக் கறி, தோசை மற்றும் காரசாரமான தமிழ் கலாச்சார உணவுச் சுவைகளுக்குப் பெயர் பெற்றது.
மிரிஸ்ஸ – புதிய கடல் உணவுகள் மற்றும் நிதானமான கடற்கரை உணவு அனுபவங்களுக்குப் பிரபலமானது.
நுவரெலியா – தேயிலை சார்ந்த உணவு வகைகள், பேஸ்ட்ரிகள் மற்றும் காலனித்துவ கால உன்னத உணவுகளுக்குப் பெயர் பெற்றது.
ஹிக்கடுவ – புதிய கடல் உணவுகள், இலங்கை கறிகள் மற்றும் துடிப்பான கடற்கரை உணவு அனுபவங்களை ஒருங்கிணைக்கிறது.
திருகோணமலை – புதிய கடல் உணவுகள் மற்றும் உண்மையான கடலோர உணவு வகைகளுக்குப் பிரபலமானது.
2026 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் மெக்சிகோ உலகின் முதன்மையான உணவுத் தளமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இத்தாலியும் ஸ்பெயினும் அவற்றின் நீண்டகால சமையல் சிறப்பு மற்றும் உலகளாவிய செல்வாக்கிற்காக முறையே அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
இந்த சிறந்த 50 நாடுகள் பட்டியலானது ஐரோப்பா, ஆசிய-பசிபிக், அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் முன்னணி உணவுத் தலங்களையும் உள்ளடக்கியுள்ளதுடன், தங்களது சமையல் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டு, அதே நேரத்தில் புதுமை மற்றும் நிலையான உணவு முறைகளை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்ட நாடுகளைக் கௌரவிக்கிறது.
இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், குறிப்பாக உண்மையான உணவு மற்றும் கலாச்சார அனுபவங்களைத் தேடும் சர்வதேச பயணிகளிடையே, ஒரு சுற்றுலாத் தலமாக அதன் ஈர்ப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் சிறந்த 50 உணவுக்கான நாடுகள் (Top 50 Food Destinations)
1. மெக்சிகோ (Mexico)
2. இத்தாலி (Italy)
3. ஸ்பெயின் (Spain)
4. ஜப்பான் (Japan)
5. இந்தியா (India)
6. அமெரிக்கா (United States)
7. கிரீஸ் (Greece)
8. போர்த்துக்கல் (Portugal)
9. சீனா (China)
10. இந்தோனேசியா (Indonesia)
11. பிரான்ஸ் (France)
12. பெரு (Peru)
13. தாய்லாந்து (Thailand)
14. வியட்நாம் (Vietnam)
15. தென் கொரியா (South Korea)
16. ஆர்ஜென்டினா (Argentina)
17. பிரேசில் (Brazil)
18. துருக்கி (Turkey)
19. லெபனான் (Lebanon)
20. மொரோக்கோ (Morocco)
21. கொலம்பியா (Colombia)
22. பிலிப்பைன்ஸ் (Philippines)
23. ஈரான் (Iran)
24. மலேசியா (Malaysia)
25. தாய்வான் (Taiwan)
26. ஐக்கிய இராச்சியம் (United Kingdom)
27. ஜேர்மனி (Germany)
28. ஜமைக்கா (Jamaica)
29. தென்னாபிரிக்கா (South Africa)
30. சிங்கப்பூர் (Singapore)
31. ஜோர்ஜியா (Georgia)
32. குரோஷியா (Croatia)
33. போலந்து (Poland)
34. ஒஸ்திரியா (Austria)
35. சிலி (Chile)
36. எகிப்து (Egypt)
37. எத்தியோப்பியா (Ethiopia)
38. ஹங்கேரி (Hungary)
39. பெல்ஜியம் (Belgium)
40. கனடா (Canada)
41. அவுஸ்திரேலியா (Australia)
42. சுவிட்சர்லாந்து (Switzerland)
43. நெதர்லாந்து (Netherlands)
44. ஸ்வீடன் (Sweden)
45. அயர்லாந்து (Ireland)
46. நியூசிலாந்து (New Zealand)
47. டென்மார்க் (Denmark)
48. கியூபா (Cuba)
49. பாகிஸ்தான் (Pakistan)
50. இலங்கை (Sri Lanka)
