அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக, முழுமையான இரத்த (FBC) பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்ததை ஒப்புக்கொண்ட யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு 3 மில்லியன் ரூபா (30 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பலாலி வீதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியசாலை , FBC பரிசோதனைக்கான அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட கட்டணம் ரூ. 400 ஆக இருக்கும் நிலையில், ரூ. 550 வசூலித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) தெரிவித்துள்ளது.
ஜூலை 13 அன்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வின்போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நுகர்வோர் விவகார அதிகார சபை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுத்தது. ஜூலை 21 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைத்தியசாலை நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டது.
நீதிமன்றம் ரூ. 3 மில்லியன் அபராதம் விதித்ததுடன், இந்த விதிமீறல் தொடர்பான அறிவிப்புகளை வைத்தியசாலையின் சொந்தச் செலவில் தேசிய நாளிதழ்களில் வெளியிடுமாறும் உத்தரவிட்டது.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்க்குமாறும், எப்போதும் அதிகாரப்பூர்வ பற்றுச்சீட்டை கோரிப் பெறுமாறும், அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
