சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஊடகவியலாளர்களுக்கான “ஹோமாகம ஊடகவியலாளர்கள் வீடமைப்புத் திட்டத்திற்கு” விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. அச்சு, இலத்திரனியல், இணைய ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் நலனுக்காக இந்த வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் ஊடகவியலாளர்கள் இலங்கையின் நிரந்தரக் குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டும் என்பதுடன், அவர்களுக்குச் சொந்தமாக வீடோ வீடு கட்டத் தகுந்த காணியோ இருக்கக் கூடாது என அமைச்சு நிபந்தனை விதித்துள்ளது.
அத்துடன், விண்ணப்பதாரர்கள் ஊடகத்துறையில் குறைந்தது 10 வருடங்கள் சேவையாற்றியவராகவும், 30 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் அவசியமாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 500 சதுர அடி பரப்பளவைக் கொண்ட 27 வீடமைப்பு அலகுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படவுள்ளன. விண்ணப்பதாரர்களின் தொழில் அனுபவம் மற்றும் பிற வரையறுக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த 2026 ஆம் ஆண்டுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்களை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.media.gov.lk ஊடாக ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவுத் தபாலில், “செயலாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, இல. 163, ‘அசிதிசி மெதுர’, கிருலப்பனை மாவத்தை, பொல்ஹேங்கொட, கொழும்பு 05” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்த மேலதிக தகவல்களை அமைச்சின் வெகுஜன ஊடகப் பிரிவைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
முகவரி ஆங்கிலத்தில்:
Secretary, Ministry of Health and Mass Media,
No. 163, “Asidisi Medura”,
Kirulapone Mawatha,
Polhengoda, Colombo 05.
