500 மேற்பட்ட முதலைகளின் வாழ்விடமாக திகழும் ஆஸ்திரேலிய ஆறு ஒன்றில், 2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளின் படகோட்டம் (Rowing) மற்றும் கேனோயிங் (Canoeing) நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள Fitzroy River ஆறு, இதற்கான தகுதிப் பரிசோதனைகளில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, உலகப் படகோட்டச் சம்மேளனம் (World Rowing) மற்றும் ‘பேடில் ஆஸ்திரேலியா’ இந்த ஆற்றுக்கு அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளித்துள்ளன.
ஒலிம்பிக் அமைப்பும் இந்த ஆற்றுப் பாதையை உறுதி செய்துள்ளது.
இது குறித்துப் கருத்து வெளியிட்ட குயின்ஸ்லாந்து பிரீமியiர் “இது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகிவிட்டது” என்று தெரிவித்தார்.
சுயாதீன உள்கட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆணைக்குழு (GIICA) இந்த ஆற்றில் பல்வேறு தொழில்நுட்பப் பரிசோதனைகளை மேற்கொண்டது. \
இவை உலகப் படகோட்டச் சம்மேளனங்களால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டன.
படகோட்டம், பாரா படகோட்டம், கேனோ ஸ்ப்ரிண்ட் உள்ளிட்ட போட்டிகளுக்குப் பாதுகாப்பான மற்றும் சமமான களம் அமைத்துக் கொடுக்க இந்த ஆறால் முடியும் என்று GIICA தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஆச்சரியப்படும் விதமாக, மேற்கொள்ளப்பட்ட தகுதிப் பரிசோதனைகளில் முதலைகள் பெரிய பிரச்சினையாகக் கருதப்படவில்லை. போட்டிகள் நடைபெறும் காலத்திலும் அதற்கு முன்னதாகவும் நிலவும் வானிலை மாற்றங்கள், நீர்மட்டம் மற்றும் வெள்ள அபாயங்கள் போன்ற சூழல்களில் இந்த ஆறு எவ்வாறு இயங்கும் என்பது குறித்தே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
பிட்ஸ்ராய் ஆறு ஏற்கனவே பள்ளி அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகள், உள்ளூர் படகோட்டப் போட்டிகள் மற்றும் தேசிய அணிகளின் பயிற்சி முகாம்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால், முதலைகள் தென்படும் பட்சத்தில் கையாளப்பட வேண்டிய அவசரக்கால திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும், வீராங்கனைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராக்ஹாம்ப்டன் பிராந்திய கவுன்சிலின் கூற்றுப்படி, பிட்ஸ்ராய் ஆறு முதலைகளின் இயல்பான வாழ்விடமாகும்..இருப்பினும், ஆற்றின் வலுவான நீரோட்டமானது உலகப் படகோட்டச் சம்மேளனத்தின் தரநிலைகளுக்கு ஈடுகொடுக்குமா என்பதே முதன்மைப் கவலையாக இருந்தது.
இது குறித்து ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கான அமைச்சர் டிம் மேண்டர் கூறுகையில், “ராக்ஹாம்ப்டன் உலக அளவில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் சிறந்த படகோட்ட வீரர்கள் இந்த பிட்ஸ்ராய் ஆற்றில் போட்டியிடுவதை நாம் காண்பதற்கு இந்த ஒப்புதல் நம்மை மேலும் ஒரு படி நெருங்கச் செய்துள்ளது” என்று கூறினார்.
2025 மார்ச் மாதத்திலேயே படகோட்டப் போட்டிகளுக்கு இந்த ஆறு முன்மொழியப்பட்டது. ஆனால், வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1992-ன் கீழ் இங்குள்ள முதலைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக உள்ளதால் (அனுமதியின்றி அவற்றை வேட்டையாடுவதோ அல்லது பிடிப்பதோ குற்றமாகும்), இ இடத்தை மறுபரிசீலனை செய்யுமாறு குயின்ஸ்லாந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய ஒலிம்பிக் தங்கம் வென்ற படகோட்ட வீரர் ட்ரூ கின், “முதலைகள் இருக்கும் போது நான் இன்னும் வேகமாகப் படகு ஓட்டுவேன் என்று நம்புகிறேன்; அனைத்து வீரர்களும் வேகமாகவே செயல்படுவார்கள்! கவலைகளின் பட்டியலில் முதலைகளும் ஒன்றுதான் என்றாலும், அது மட்டுமே முதன்மையான கவலை இல்லை” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.










