“இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மட்டுமே நான் இந்த நாடாளுமன்றத்தில் இருப்பேன். இங்கிருந்து நான் சென்ற பிறகு உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது” என்று யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உருக்கமாகத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவிக்கையில்:
“கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, 7 கோப்புகளுடன் (Files) ஊழல்களை வெளிப்படுத்த வந்த என்னை, திட்டமிட்ட அடிப்படையில் படுகேவலமாக விமர்சித்து வெளியேற்ற முற்பட்டனர்.
மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்குத் தேர்வான என்னை, தேசியப் பட்டியலின் மூலம் வந்தவர் விமர்சிக்கின்றார். நான் யாரையும் தாக்கவில்லை. ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் பல முறைப்பாடுகளைச் செய்தும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை.
மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களில் ஊழல்களைச் சுட்டிக்காட்ட முற்படும் போது, குண்டர் குழுவினர் எம்மைத் தாக்க முற்படுகின்றனர். எனக்கு உரிய பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. துப்பாக்கி அனுமதி வழங்கினார்கள், ஆனால் அதனை வெளியில் எடுத்தாலும் வழக்குத் தொடர்கின்றனர்.
என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக நபரொருவர் வழக்குத் தொடுத்துள்ளார். வடக்கிலிருந்து சுயாதீனமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வருவது சிங்கள மக்களுக்கு விருப்பமில்லை என்ற தவறான தகவலையே இந்த நடவடிக்கை எமது மக்களுக்கு வழங்கும்.
நான் இந்த நாடாளுமன்றத்தில் அதிக காலம் இருக்கப்போவதில்லை. உங்களை நீண்ட காலத்திற்குத் தொந்தரவு செய்ய மாட்டேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் மட்டுமே இங்கு இருப்பேன்” என அர்ச்சுனா இராமநாதன் மேலும் குறிப்பிட்டார்.
