மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதெனில் தேர்தலுக்கு அரசு அஞ்சுவது ஏன்?

மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்குரிய ஆதரவு அதிகரித்துள்ளது என்றால், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஏன் அஞ்ச வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்ஜீவ எதிரிமான்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக ஆளுங்கட்சி தரப்பிலேயே கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு அந்தளவிற்கு செல்வாக்கு இருக்குமாயின், மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

தாங்கள் ஆட்சிக்கு வந்து ஓராண்டிற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது. எனவே, அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். கருத்துக்கணிப்புகளை விடவும், மக்களிடம் நேரடியாகக் கருத்துக்களைப் பெறுவதற்கான ஒரு களமாக இந்தத் தேர்தல் அமையும்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உட்பட ஆட்சி மாற்றத்துக்கு 4 காரணங்கள் உள்ளன. அந்த 4 காரணங்களையும் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ” என்று சஞ்ஜீவ எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles