தெற்கில் தோல்வி பீதியெனில் வடக்கிலாவது தேர்தலை நடத்தவும்: அரசுக்கு நாமல் சவால்!

“மஹிந்த ராஜபக்சவுக்கு பிறகு வடக்கில் எவரும் தேர்தலை நடத்தவில்லை. எனவே, குறைந்தபட்சம் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

தெற்கில்தான் தோல்விபீதியெனில் முதுகெலும்பிருந்தால் வடக்கிலாவது தேர்தலை நடத்திக்காட்டட்டும் எனவும் அவர் சவால் விடுத்தார்.

மொட்டு கட்சியின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ராணுவத்தை நினைவுகூருவதற்கு சென்றால் பொலிசுக்கு வாக்குமூலம் அளிக்க வேண்டியுள்ளது. ஆனால் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு தலைக்கவசம்கூட இன்றி பயணிப்பதற்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எமக்கு தமிழ் மக்களுடன் பிரச்சினை இல்லை.

மாகாணசபைத் தேர்தல் நடக்காது என ஜே.வி.பியின் செயலாளர் கூறிவருகின்றார். தெற்கில் தேர்தலை நடத்துவதற்கு அச்சமெனில் குறைந்தபட்சம் வடக்கு மாகாணசபைத் தேர்தலையாவது நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றேன். முதுகெலும்பிருந்தால் இந்த சவாலை அரசாங்கம் ஏற்கட்டும்.

மஹிந்த ராஜபக்ச வடக்கு மக்களுக்கு ஜனநாயக சுதந்திரத்தை வழங்கினார். அவர் தேர்தலை நடத்தினார். வடக்கு மக்களுக்குரிய உரிமைகளைப் பற்றி பேசுவதற்கு முன்னர் தேர்தல் உரிமையைக் காட்டுங்கள்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles