” இலங்கை அரசு, சர்வதேச நாணய நிதியத்தை நாடும் பட்சத்தில் மறுநொடியே அரசியிலிருந்து வெளியேறுவேன். சர்வதேச நாணய நிதியத்திடம் கடம்பெறுவதென்பது ஏழு பரம்பரைகளுக்கு பாதகமாகவே அமையும்.” – என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஒரு நாடால் ஒன்றுமே செய்யகொள்ள முடியாத பட்சத்தில், இறுதியாக நாடப்படும் இடம்தான் சர்வதேச நாணய நிதியம். நெருக்கடியான நிலையில்தான் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்தை நாடும். இதன்போது இடம்பெறும் கொடுக்கல், வாங்கலானது சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கையின் பிரகாரமே இடம்பெறும். கடுமையான நிபந்தனைகளும் அதில் உள்ளடங்கும்.
குறிப்பாக அரச சொத்துகளை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்வனவு செய்வதற்கு இடமளித்தல், நாட்டில் நலன்புரி விடயங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை படிப்படியாக குறைத்தல், ரூபாவின் பெறுமதியை சுதந்திரமாக தீர்மானிக்க விடுதல் என பல நிபந்தனைகள் உள்ளன. இவற்றை ஏற்றால் அவை நாட்டுக்கு பாதக விளைவுகளையே தரும்.
அப்படியானால் மாற்றுவழி என்னவென்று சிலர் கேட்கலாம், எமது நட்பு நாடுகளுடன் டொலர் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள தற்காலிக உடன்படிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எமது அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாடும் தீர்மானத்தை எடுத்தால் அரசில் இருக்கமாட்டேன்.”- என்றார்.