ராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில் வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களுக்கான உடனடி மாற்று நடவடிக்கை அவசியம் என முன்னாள் அமைச்சரும் , பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ராகலை சென்லெனாட்ஸ் தோட்டத்தில் 6 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டமை கவலைக்குரியது. ஒரே பொழுதில் அவர்கள் நிர்கதி நிலைக்குள்ளாகியுள்ளனர்.
நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கின்ற ஏற்றுக்கொள்கின்றெ அதேவேளை இந்த சம்பவத்திற்கு மனிதாபிமான செயற்பாடும் அவசியம்.
தோட்ட முகாமைத்துவம் இந்த விடயத்தில் அசமந்தபோக்கில் இருந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு ஜனவரி மாதம் வந்துள்ள நிலையில் உரிய தரப்பினருக்கு ஆறு மாதம் கடந்தும் தகவலை வழங்காமல் இருந்தது. அவர்களுடைய மேம்போக்கான தனத்தினை வெளிப்படுத்துகிறது.
பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு சொந்தமான காணிகளில் பெருந்தோட்ட கம்பெனிகளின் அனுமதி இன்றி ஏதாவது கட்டிடங்களை நிர்மாணிக்கின்ற பொழுது குடியேறுகின்ற பொழுது அப்பாவி மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற பெருங்தோட்ட நிறுவனங்கள் இத்தகைய சம்பவங்களை எவ்வாறு அனுமதிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியே.
இருந்தாலும் இன்று தோட்ட தொழிலாளர்கள் இருப்பிடங்கள் இன்றி காணப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு உடனடியான மாற்று நடவடிக்கை எடுப்பது முக்கியமானதாகும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஏதாவது ஒரு வீடமைப்பு திட்டத்தின் ஊடாக அவர்களுக்கு உடனடியாக குடியிருப்புகளை வழங்கி வைப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கமும் அமைச்சும் முன்னெடுக்க வேண்டும் அது தொடர்பில் குறித்த அமைச்சின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
