பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்தான்புல் நோக்கிப் பயணித்த டர்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பறவை ஒன்றுடன் மோதியதாகக் கூறப்பட்டதை அடுத்து, சனிக்கிழமை அவசரமாக மீண்டும் கட்டுநாயக்கவிற்குத் திரும்பியுள்ளது.
விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகள் வழமை போல் இயங்குவதாகவும், விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
TK731 என்ற விமான இலக்கத்தைக் கொண்ட எயார்பஸ் A330-300 (Airbus A330-300) ரக விமானமே இவ்வாறு அவசர தரையிறக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தரையிறங்குவதற்கு முன்னதாக இந்த விமானம் இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு அப்பாலுள்ள வான்பரப்பில் மூன்று மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பறந்துகொண்டிருந்தது.
இந்த விமானத்தில் பறக்கும்போதே எரிபொருளை வெளியேற்றும் (Fuel dumping) வசதி இல்லை என்பதால், தரையிறங்குவதற்கான எடையைக் குறைக்கும் பொருட்டு வான்பரப்பில் பறந்தபடி எரிபொருளை எரிக்க வேண்டியிருந்ததாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) தெரிவித்துள்ளது.
விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக, நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின்படி (SOP) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அவசரகால மீட்பு மற்றும் தீயணைப்புப் பிரிவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவம் உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான விமான ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் இந்த விமானத்தின் நடமாட்டங்களை இணையவழியில் உன்னிப்பாகக் கண்காணிக்கத் தொடங்கினர். இதன் காரணமாக, இந்தச் சம்பவத்தின் போது Flightradar24 இணையத்தளத்தில் உலகிலேயே மிக அதிகமாகக் கண்காணிக்கப்பட்ட (Most-tracked flight) விமானமாக இது மாறியுள்ளது.
