சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய கைதி: சினிமாப் பாணியில் சம்பவம்

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சொந்தமான ஓய்வு விடுதியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கைதி ஒருவர், அதைக் கண்காணித்த சிறைக்காவலரின் மோட்டார் சைக்கிளைத் திருடி தப்பிச்சென்றுள்ளார்.

சினிமா பாணியில் அரங்கேறிய இச்சம்பவம் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

தப்பிச் சென்ற கைதி நாட்டாண்டிய – மெதாகொட பகுதியைச் சேர்ந்த எம். எம். உமேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பதிவு இலக்கம் E 33986-ன் கீழ் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

காவல் துறையினரின் கூற்றுப்படி, அதிகாரி மதிய உணவு அருந்துவதற்காக தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்றுள்ளார்.

அதிகாரி இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கைதி, விடுதியிலிருந்த சாரம் ஒன்றை அணிந்துகொண்டு, விடுதிக்கு முன்னால் சாவி பொருத்தப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு லெஸ்லி ரணகல மாவத்தை நோக்கிய வாயில் வழியாக தப்பிச் சென்றுள்ளார்.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் பெறுமதி சுமார் 1,50,000 ரூபாய் என சிறைச்சாலை அதிகாரி பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தப்பிச் சென்ற கைதியை கைது செய்ய சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள துஷாரவின் ஆலோசனையின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் புத்திக சமரகோன் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles