ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறை: ஊடரங்கு அமுல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்களும் நான்கு பாலஸ்தீனக் கிராமவாசிகளும் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் குடியேற்றப் பகுதிகளின் கட்டுமானத்தை அதிகப்படுத்த இஸ்ரேல் மேற்பார்வையிட்டு வரும் நிலையில், மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனர்கள் வன்முறை அலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இப்பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளும் குடியேற்றக் கட்டுமானங்களைச் சர்வதேச சமூகம் சட்டவிரோதமானது என்றும் அமைதிக்கு இடையூறானது என்றும் பெருமளவில் கருதுகிறது.

வடக்கு மேற்குக் கரையில் உள்ள ‘டெல்’ (Tell) கிராமத்தில் இஸ்ரேலிய வீரர்கள் சுட்டதில் , நான்கு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே வேளையில், உள்ளூர் பாதுகாப்புப் படையில் இருந்த குடியேற்றவாசி ஒருவர் உட்பட இரண்டு வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் இரண்டு இஸ்ரேலியர்களும் நான்கு பாலஸ்தீனர்களும் காயமடைந்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மேற்குக் கரையில் ஒரு “விரிவான” பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தயாராகி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது.

இஸ்ரேலிய இராணுவம் “பயங்கரவாத எதிர்ப்பு” நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதுடன் ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பாலஸ்தீனர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், நப்லஸில் (Nablus) நடத்தப்பட்ட சோதனையின் போது இருவரைக் கைது செய்துள்ளதாகவும் அது கூறியுள்ளது.

வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) உடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மேற்குக் கரைக்குக் கூடுதல் படைகளை அனுப்ப வேண்டும் என்றும், ‘டெல்’ கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அத்துடன் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யவும், அந்த கிராமவாசிகளின் வேலை அனுமதிப் பத்திரங்களை ரத்து செய்யவும் அழைப்பு விடுத்தார்.

1993-ஆம் ஆண்டின் ‘ஒஸ்லோ ஒப்பந்தங்களின்’ (Oslo Accords) படி, ‘பகுதி B’ (Area B) இன் கீழ் இந்த கிராமம் இஸ்ரேலியர்கள் நுழையத் தடைசெய்யப்பட்ட பகுதியாகும்.

Related Articles

Latest Articles